மகள் உறவு கொண்ட சிறுமியை திருமணம் செய்வதற்காக, மனைவியை கணவன் அடித்தே கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான பனிப்பிச்சை என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான மேகலா என்ற பெண்ணிற்கும் இடையே, கடந்த 2012 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். 

இந்த நிலையில், கடந்த நவம்பர் 17 ஆம் தேதி இரவு மாரடைப்பால் மேகலா இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தாருக்கு கணவன் பனிப்பிச்சை தகவல் 
தெரிவித்துள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, தற்போது கொரோனா தொற்று என்பதால், மனைவி இறந்த மறுநாள் காலை அதாவது நவம்பர் 18 ஆம் தேதி காலையிலேயே, அவசரமாக மனைவியின் உடலை அவர் அடக்கம் செய்துள்ளார்.

இப்படி அவசர அவசரமாக மனைவியை அவர் அடக்கம் செய்ததால், மேகலாவின் சகோதரர் அந்தோணிக்கு, கணவன் பனிபிச்சை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், மனைவி மேகலா இறந்த 30 வது நாளான டிசம்பர் 21 ஆம் தேதி முட்டம் தேவாலயத்தில் நினைவு திருப்பலி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது, அங்கு வந்த பனிப்பிச்சை, தனது மகனிடம் கடிதம் ஒன்றை கொடுத்து அதை மேகலாவின் சகோதரியின் மகளிடம் கொடுக்க சொன்னதாகத் தெரிகிறது. 

அந்த கடிதத்தை வாங்கிப் பார்த்த மகள் முறை கொண்ட அந்த 16 வயதுடைய சிறுமி, அதனை படித்துப் பார்த்துவிட்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன், அந்த கடிதத்தை, தனது தாயாரிடம் கொடுத்து உள்ளார். இதனைப் பார்த்த அந்த சிறுமியின் தயார், அந்த கடிதத்தைப் படித்து அதிர்ச்சியடைந்து,

அந்த கடிதத்தில், “சிறுமியை குறிப்பிட்டு உன்னை நான் காதலிக்கிறேன். உன்னைத் திருமணம் செய்து கொள்வே உனது சித்தியான எனது மனைவி மேகலாவை நான் அடித்துக் கொலை செய்தேன். தற்போது நான் எந்த துணையும் இல்லாமல் தவிக்கிறேன். எனது குழந்தைகளுடன் சேர்ந்து நாம் வாழலாம். என்னை நீ காதலிக்க வேண்டும்” என்று, அதில் குறிப்பிட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.

அந்த சிறுமியின் உறவினர் பலரும் அந்த கடிதத்தைப் படித்துவிட்டு, இறுதியாக அதனை மேகலாவின் சகோதரர் அந்தோணியிடம் கொடுக்கப்பட்டது. இதனைப் படித்துப் பார்த்துவிட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், அந்த கடிதத்தை காட்டி குளச்சல் கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தார். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், மேகலாவின் உடலை காவல் துறையினர் தோண்டி எடுத்து தாசில்தார் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்தனர். 

இதனையடுத்து, மனைவியை அடித்தே கொன்ற கணவன் பனிப்பிச்சையை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் அளித்த வாக்குமூலம் குறித்து காவல் துறையினர் கூறும்போது, “மனைவியின் உடன் பிறந்த சகோதரியின் 16 வயதுடைய மகள், ஆன்லைன் வகுப்புக்காக பனிப்பிச்சை வீட்டுக்கு வந்திருக்கிறார். 

அப்போது, சிறுமிக்கு அவ்வப்போது அவர் பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வந்திருக்கிறார். இது குறித்து அவர் மனைவி மேகலாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. அப்போது, கோபப்பட்ட கணவன் பனிப்பிச்சை, தன் மனைவியை அடித்தே கொலை செய்திருக்கிறார்” என்று கூறியுள்ளார். 

அத்துடன், சிறுமிக்கு பனிப்பிச்சை எழுதிய கடிதத்தையும் அவரது வாக்குமூலத்தையும் ஆதாரமாக வைத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.