பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கு தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள லஞ்சம் குறித்த பட்டியலை நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
 
தமிழக அரசியல் களம் தற்போது தான் சூடுபிடித்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரைகளைத் தொடங்கி உள்ளன. இதனால், ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறது.

இந்த நிலையில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “எங்கள் ஆட்சியின் போது அனைவரின் வீட்டிலும் இணைய வசதியுடன் கணினி இருக்கும்” என்று, குறிப்பிட்டார். 

“அது தொடர்பான  முதலீட்டை அரசு கொடுக்கும் என்றும், இணைய வசதி இருப்பதால் அரசுக்கும், மக்களுக்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும்” என்றும், கூறினார். 

அத்துடன், “நேர்மை தான் மக்கள் நீதி மையத்தின் சாதனை” என்றும்,  நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும், “தமிழ் பேசும் அனைவரும் திராவிடர்கள் தான்” என்றும் அவர், குறிப்பிட்டுப் பேசினார்.

“தமிழ் நாட்டில், தொட்டில் முதல் சுடுகாடு வரை தனித்தனியாக லஞ்சம் பெறுவது தொடர்கிறது” என்றும், அவர் வேதனை தெரிவித்தார். 

முக்கியமாக, “இது தொடர்பான லஞ்சப்பட்டியல் தான் நான் கையில் வைத்துள்ளேன் என்றும், அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்றும், அவர் தெரிவித்தார். 

குறிப்பாக, “ தமிழகத்தில், எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு ரூபாய் லஞ்சமாகப் பெறப்படுகிறது” என்கிற பட்டியலையும் நடிகர் கமல்ஹாசன் அப்போது வெளியிட்டார். 

அதன் படி, “தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் பெண் குழந்தை பிறந்தால் 300 ரூபாயும், ஆண் குழந்தை பிறந்தால் 500 ரூபாய் லஞ்சமும் கொடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது” என்றும், நடிகர் கமல் வேதனை தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தில் நாங்கள் தற்போது 3 வது அணியாக உருவாகிவிட்டோம் என்றும், எங்கள் தலைமையில் 3 வது அணி இருக்கும் என நான் நம்புகிறேன் என்றும், கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும்” என்றும், கமல்ஹாசன் தெரிவித்தார்.

அதே போல், நடிகர் ரஜினியின் அரசியல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய கமல்ஹாசன், “ரஜினியின் உடல் நிலையும், ஆரோக்கியமும் தான் தற்போது முக்கியம் என்றும், உடல் நிலை சரியான பிறகு கட்சி துவங்கும் பணியை அவர் தொடங்குவார், முதலில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் பெற வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், “வீட்டு இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பது மக்கள் நீதி மையத்தின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறும் என்றும், மக்கள் நீதி மய்யம் கூட ஒரு திராவிட கட்சி தான் என்றும், தமிழ் பேசும் அனைவரும் இங்கே திராவிடர்கள் தான்” என்றும், கமல் கூறினார். 

மேலும், “விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சியடையும் என்றும், அது நமது நாட்டிற்கு நடக்க கூடாது” என்றும், நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  வெளியிட்டுள்ள இந்த லஞ்சம் தொடர்பான பட்டியல், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.