காதல் பிரச்சனையில் காதலியை அடிபணிய வைக்க 2 சிறுமிகளை கடத்திய இன்ஸ்டாகிராம் காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பல் ஆய்வகம் நடத்திவருபவருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த சிறுமி, தனது தங்கை முறை உறவு கொண்ட 8 வயது சிறுமியுடன் கடந்த 26 ஆம் தேதி விளையாடச் சென்றார். 

ஆனால், அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அந்த சிறுமிகள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், அவர்களைப் பல இடங்களில் தேடிப் பார்த்த அந்த சிறுமிகளின் பெற்றோர், பயந்துபோய் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், மாயமான 13 வயது சிறுமி எழுதிய கடிதம் ஒன்று, காவல் துறையினருக்குக் கிடைத்தது.

அந்த கடிதத்தில், “எனக்கு நுரையீரல் பிரச்சினை இருந்து வருவதால், தனது பெற்றோர் அதிக பணம் செலவு செய்கின்றனர். இதனால், அவர்களுக்கு நான் மேலும் செலவு வைக்க விரும்பவில்லை” என்றும், குறிப்பிட்டு இருந்தார்.

அத்துடன், “காணாமல்போன 8 வயது சிறுமியான எனது தங்கையை மட்டுமே எனது பெற்றோர் நன்றாக கவனிப்பதாகவும், அதனாலேயே என்னை என் பெற்றோர் கவனிக்க மறுப்பதாகவும்” அந்த கடிதத்தில், அந்த சிறுமி கூறியிருந்தார். 

இதையடுத்து காணாமல் போன 2 சிறுமிகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதனால், இந்தக் கடிதம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு செல்லும் போது, அவர்கள் தங்களது செல்போனையும் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, இவர்களது செல்போன் எண்ணை வைத்து தேடிப் பார்த்ததில், சிறுமிகள் இருவரும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

அதே நேரத்தில், இளைஞர் ஒருவருடன் 2 சிறுமிகள் அழுதுகொண்டே செல்வதாகத் திருநங்கைகள் சிலர் விழுப்புரம் ரயில்வே காவலர்களுக்குத் தகவல் கூறியுள்ளனர். 

இது குறித்து போலீசார் உடனே அங்கு வந்து அந்த இளைஞனிடம் விசாரணை நடத்தினர். அப்போது. அந்த இளைஞன் உடன் இருந்த 8 வயது சிறுமி, தங்களை மிரட்டி இந்த இளைஞன் அழைத்து வந்துவிட்டதாகக் கூறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு, விசயத்தைக் கூறி உள்ளனர்.

இதனையடுத்து, விழுப்புரம் விரைந்து சென்ற போலீசார், 2 சிறுமிகளையும் மீட்டு, அந்த இளைஞனை கைது செய்து அழைத்து வந்தனர். அந்த இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரின் மகன் 19 வயதான சூர்ய பிரகாஷ் என்பது தெரிய வந்தது. 

அத்துடன், இந்த இளைஞன், அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. 

முக்கியமாக, இந்த இளைஞனும், கடத்தப்பட்ட 13 வயது சிறுமிக்கும் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், இருவரும் காதலிக்கத் தொடங்கிய நிலையில், இவர்களது காதலில் திடீரென்று பிரச்சனை ஏற்பட்டதால், அந்த சிறுமியை அந்த இளைஞன் கடத்தியதும், அப்போது உடன் இருந்த 8 வயது சிறுமியை மிரட்டி, தனது காதலியை அடிபணிய வைக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து, சூர்ய பிரகாஷை கைது செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.