கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல்; ஆணழகன் பட்டம் வென்றவர் கைது

திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் லைப் வாழ்ந்து வந்த காதலிக்கு, ஆணழகன் பட்டம் வென்ற காதலன் கொலை மிரட்டல் விடுத்ததால், அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த 31 வயதான சந்தியா மோகன் என்ற இளம் பெண், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். 

அந்த இளம் பெண் அளித்த புகாரில், “சென்னை காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் 29 வயதான மணிகண்டன் என்ற இளைஞன், சமூக வலைத்தளம் மூலமாக எனக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார் என்றும், அது முதல் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்ட நிலையில், எனது தனிப்பட்ட பயிற்சி மற்றும் ஆலோசனை பெறுவதற்காக அவரை சந்தித்துப் பேசினேன் என்றும், அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் கோவைக்கு ஒன்றாக சேர்ந்து சென்றோம்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

அந்த பயணத்தில் மணிகண்டன், “என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, என்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டார்” என்றும், அந்த புகாரில் அந்த இளம் பெண் சுட்டிக்காட்டி உள்ளார்.

“அதன் பிறகு, நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் - மனைவி போல், ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் லைப் வாழ்ந்து வந்தோம் என்றும், நாங்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் போது, அதனை அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார் என்றும், ஆனால் தற்போது காதலன் மணிகண்டன், அந்த வீடியோக்களை காட்டி என்னைத் துன்புறுத்தி வருகிறார்” என்றும், தனது புகாரில் அந்த இளம் பெண் குற்றம்சாட்டி உள்ளார். 

இப்படியாக, “பல முறை என்னை அவர் சரமாரியாக தாக்கி காயப்படுத்தி இருக்கிறார் என்றும், என்னைக் கொலை செய்து விடுவேன் என்றும், அவர் தொடர்ந்து மிரட்டி வருகிறார் என்றும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அந்த பெண் தனது புகாரில் வலியுறுத்தி உள்ளார்.

அதன்பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனிடம் விசாரித்தனர். அதில் அவர், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காதலியைத் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததும் உறுதியானது.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், மணிகண்டனை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, கைதான மணிகண்டன், ஆணழகன் போட்டியில் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர் என்பதும், போலீசாருக்குத் தெரிய வந்தது. 

மேலும், இளம் பெண் அளித்த புகாரின் போரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.