மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல  மாவட்டத்தில் கடந்த வாரம் முதல்  கனமழை பெய்தது. மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.
மேலும் கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பல நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த ஒரு வாரகாலமாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களைப் பாா்வையிட மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ராஜீவ் ஷா்மா தலைமையில் 7 போ கொண்ட குழு, ஞாயிற்றுக்கிழமை  சென்னை வந்தடைந்தது.

இதனைத்தொடர்ந்து  அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி முதல் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது. தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கடந்தது என்றும், முழு பகுதியும் அதிகாலை 5.30 மணிக்குள் கரையை கடந்துவிட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கரையை கடந்ததும் தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலு குறைந்து, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று  முதல் 23-ந் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடியில்   இடி மின்னலுடன் கூடிய   கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 25, 26 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்பரநாடு, மூங்கில்துறைபட்டு பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் மேற்கு தாம்பரம், ஆவடி, எடப்பாடி உள்ளிட்ட பகுதியில் தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.