“ஜெய்பீம் படத்தைத் துணிவுடன் எத்தமைக்காகவும், பழங்குடி மக்களின் நலனுக்குத் திட்டங்களைக் கொண்டு வந்ததற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய பழங்குடி மக்கள், நூதன முறையில் நன்றி தெரிவித்தனர்.

நடிகர் சூர்யா நடித்துத் தயாரித்த படம் “ஜெய்பீம்” படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக, குறிப்பிட்ட ஒரு சாதியினரும், குறிப்பிட்ட ஒரு கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

இதனையடுத்து, படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சிகள் கடந்த வாரம் நீக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்டது. ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் நடிகர் சூர்யாவுக்கு தொடர்ந்து மிக கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

என்றாலும், சமூகத்தின் விளிம்பில் இருக்கும் இருளர் இன மக்களின் இன்னல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக பெரும்பான்மையானான் மக்கள் நடிகர் சூர்யாவுக்கும், அந்த படக்குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அத்துடன், நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் என மிரட்டல் விடுத்த பாமக மாவட்டச் செயலாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

ஆனால், “ஜெய்பீம்” படத்திற்கு எதிராகக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் தொடர்ந்து கருத்து கூறி வந்ததால், “ஜெய்பீம் படத்தின் ஆக்கத்தில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும், அப்படி யாரேனும் படத்தால் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும்” அந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் நேற்று அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் தான்,  “ஜெய்பீம்” படத்தைத் தைரியத்துடன் எடுத்தமைக்காக நடிகர் சூர்யாவுக்கும், பழங்குடி மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை ஏற்படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பழங்குடி மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று களத்தில் இறங்கிய பழங்குடி மக்கள், நூதன முறையில் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

இது குறித்து, மதுரையில் நன்றி தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பழங்குடியினரைச் சேர்ந்த காட்டு நாயக்க சமூக மக்கள், “கழுத்தில் பாம்பையும், கையில் எலியையும் வைத்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், நடிகர் சூர்யாவையும் வாழ்த்திப் பாராட்டி பேசினார்கள்.

மேலும், போராட்டத்தின் பேசிய அந்த கூட்டமைப்பின் தலைவர் மகேஸ்வரி, “ 'ஜெய்பீம்' படத்தில், எங்களுடைய சமுதாயம் சந்திக்கும் இன்னல்களை சூர்யா அப்படியே காட்டி இருக்கிறார்.

“இதனால், நடிகர் சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் எதாவது நடந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம்” என்று, அவர் ஆவேசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியினர் பாம்புகளுடன் நூதன முறையில் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.