உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது KH-ஹவஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் தொடக்கத்திற்காக அமெரிக்காவின் சிக்காகோவுக்கு பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன், அமெரிக்கா பயணம் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் லேசான இருமல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். 

தற்போது பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து தனியார் மருத்துவமனையில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

எனவே உலக நாயகன் கமல்ஹாசன் விரைவில் குணமடைந்து வர பலரும் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். முன்னதாக கமல்ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த வார இறுதியில் வரும் எபிசோடுகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். கொரோனா தொற்று குறித்து கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு இதோ…