சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்”

என்ற சொன்ன மகாகவி பாரதியார் தான்,

“தமிழ் இனி மெல்லச் சாகும்.. விழித்திடு தமிழா!” என்றான் அதே மகாகவி பாரதி.

“தற்போதைக்கு தமிழ் மொழிக்கு அத்தகைய சூழல் இல்லை என்றாலும் பலருக்கும் தோன்றினாலும், ஒரு மொழி அழிவதற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இப்போது தமிழ் மொழிக்கு வந்திருக்கிறது” என்று, தொடர்ச்சியாக, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் தொடர்ந்து கவலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு நிறைய உதாரணங்களைக் கூறலாம். இதற்குக் கல்வி நிலையங்களே துணை நிற்பது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.

அதாவது, சென்னையில் இயங்கி வரும் புழக்பெற்ற கல்வி நிலையமான சென்னை ஐஐடியில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா ஒன்று நடைபெற்று உள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவின் போது, “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடும் நடைமுறை அப்படியே புறக்கணிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

ஒரு புகழ் பெற்ற கல்வி நிலையத்தில், அதுவும் தமிழகத்தின் தலைநகரில் செயல்பட்டு வரும் ஒரு கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட அந்த கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின் போது,  “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டிருப்பது தான், ஒட்டு மொத்த தமிழ் ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பல்வேறு தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளையும், எதிர்க் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள கண்டனத்தில், “சென்னை IIT யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “மாண்புமிகு முதல்வர் அவர்கள் இது குறித்து நிர்வாகத்திடம் பேசி, இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும்,  ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளார்.