இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. முன்னதாக தீபாவளியன்று ரிலீஸாக இருந்த மாநாடு, சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போக தற்போது 25-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ள மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த மாநாடு ட்ரைலர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் திரையரங்குகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது.

இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கடிதத்தில், 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்,

திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்திரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும். தயைகூர்ந்து 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும்... திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்.
நன்றி.
சுரேஷ் காமாட்சி

என தெரிவித்துள்ளார் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் கோரிக்கை கடிதம் இதோ…