காதலியுடன் பேசிய காதலனை இளம் பெண்ணின் குடும்பத்தினர் மரத்தில் கட்டி வைத்து சேலை அணிவித்து, அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் வதோரா மாவட்டத்தில் உள்ள சோக்கரி கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான ஜயேஷ் ராவல், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, குடும்ப வறுமை காரணமாகத் தினக் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

அத்துடன், இந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். 

இந்த விசயம், சம்மந்தப்பட்ட இளம் பெண்ணின் தந்தையின் கவனத்திற்குச் சென்று உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் தந்தை காளிதாஸ் மாலி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பே அந்த காதலனைக் கடுமையாக எச்சரித்து இருக்கிறார். 

ஆனாலும், அந்த இளைஞர், தனது காதலியை சந்திப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து ரகசியமாகச் சந்தித்துப் பேசி வந்திருக்கிறார்.

அதன்படி, கடந்த 17 ஆம் தேதி புதன் கிழமை மதியம் காளிதாஸின் வயலுக்கு அருகே காதலர்கள் இருவரும் சந்தித்து தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது, அந்தப் பெண்ணின் தாயார் இதனைப் பார்த்து விட்டு, இது தொடர்பாக தனது குடும்பத்தாரிடம் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, அந்த காதலன் தனது வீட்டிற்கு சென்ற நிலையில், இளம் பெண்ணின் தந்தை காளிதாஸ், அவர்களது உறவினர்களான கிரண் மாலி, மோகன் மாலி, ரமேஷ் மாலி ஆகியயோர் சேர்ந்து அந்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று உள்ளனர்.

அப்போது, தனது வீட்டின் உள்ளே இருந்து அந்த இளைஞனை வெளியே இழுத்து வந்து அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து, அந்த இளைஞனுக்கு சேலை அணிவித்து, அவரை மிக கடுமையாகத் தாக்கி உள்ளனர். 

அத்துடன், அந்த இளைஞனை எட்டி உதைத்து, அந்த இளைஞனின் அந்தரங்கமான பாகங்களையும் மிதித்துத் தாக்கி இருக்கிறார்கள். 

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அந்த இளைஞனின் உறவினர் ஒருவர் ஓடிவந்த போது, அவரையும், அந்த கும்பல் அடித்து உதைத்துத் தாக்கி உள்ளனர். இதனையடுத்து, இளம் பெண்ணின் தந்தை உட்பட அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இதனையடுத்து, அங்கு கூடிய ஊர் மக்கள் அந்த இளைஞனின் கட்டுகளை அவிழ்த்து விட்டு, அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தும் எந்த பலனும் இல்லை. 

உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அந்த இளைஞனை கொண்டு சென்றனர். ஆனால், அந்த இளைஞன் மருத்துவமனைக்கு வரும் முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து, அந்த இளைஞனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், குற்றவாளிகள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு இளம் பெண்ணின் தந்தை காளிதாஸ் உட்பட 4 பேரையும் கைது செய்துள்ளனர். 

இதனிடையே, காதலித்த பாவத்திற்காய் 20 வயது இளைஞரை அடித்து உதைத்துக் கொன்ற வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.