மணலி புதுநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடிவுடை அம்மன் நகர், மகாலட்சுமி நகர் பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

stalin

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவந்தது . கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பல நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 5 நாட்களாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி முதல் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது. தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கடந்தது என்றும், முழு பகுதியும் அதிகாலை 5.30 மணிக்குள் கரையை கடந்துவிட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கரையை கடந்ததும் தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலு குறைந்து, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று  முதல் 23-ந் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் சென்னை கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால்  திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி,  அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை 30 ஆயிரம் கன அடி நீர் உபரிநீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆறு வழியாக வரக்கூடிய உபரிநீர் மணலி புதுநகரில் உள்ள மணலி சடயங்குப்பம் பகுதிக்குட்பட்ட வடிவுடை அம்மன் நகர், ஜெனிபர் நகர், மகாலட்சுமி நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் ஏராளமான குடியிருப்புகளில் வசித்த பொதுமக்களை மாநகராட்சி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை அங்கிருந்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வடிவுடை அம்மன் நகர், மகாலட்சுமி நகர் பகுதியில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து தெருவில் சூழ்ந்துள்ள மழை நீரில் நடந்து சென்று பார்வையிட்ட அவர் மக்களிடம் குறைகளை கேட்டார். அதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியில் தங்கி உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கனமழையால் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மணலி புதுநகர் பகுதி மக்களுக்காக, விவேகானந்தர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு  நிவாரண உதவிகளை வழங்கினார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நிவாரண முகாமில் சிறப்பு மருத்துவ முகாமை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது சென்னை மாநகர ஆணையர் சந்தீப் பேடி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர் உள்பட பலர் உடன் சென்றனர்.