பாலியல் கொடுமைக்கு நீதிகேட்டு காவல்நிலையம் போனால் இது தான் நடக்கும் என்றால், உயிரிழந்த கரூர் மாணவியின் குடும்பம் என்னபாடு பட்டிருக்கும்? என்று எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

twitter

கரூர் அரசு காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தநிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வீடு திரும்பி உள்ளார். பள்ளியில் இருந்து திரும்பிய மாணவி சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாணவி மன விரக்தியில் அமைதியாக இருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அவரது தாய், ஏன் அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டு சமாதானப்படுத்தியுள்ளார். இந்த  நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் மாணவியிடம் சோகத்திற்கான காரணத்தை விசாரித்துள்ளார். அதற்கு மாணவி பதில் ஏதும் அளிக்கவில்லை.

அதனைதொடர்ந்து பின்னர் வீட்டிற்குள் சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு மூதாட்டி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று குரல் கொடுத்துள்ளார். ஆனால் மாணவி திரும்ப குரல் கொடுக்கவில்லை. பின்னர் மூதாட்டி அறைக்குள் சென்று பார்த்தபோது மாணவி தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில்  முதலில் மாணவியின் தாய்க்கு தகவல் கொடுத்தார். மகள் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் வேலையிலிருந்து அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தார். மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து கதறி அழுதார். பின் தகவல் அறிந்து வந்த வெங்கமேடு போலீசாடிர் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். 

மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது தற்கொலைக்கு முயல்வதற்கு முன்னர் மாணவி எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. அதில், பாலியல் தொல்லையால் உயிரழக்கும் கடைசி பெண் நானாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், நீண்ட காலம் இந்த பூமியில் வாழ ஆசைப்பட்ட எனக்கு அதற்கு வாய்ப்பில்லாமல் பாதியிலேயே செல்வதாகவும் எழுதியிருந்தார். மேலும் தன்னை தற்கொலைக்கு தூண்டியது யார் என்று இந்த கடிதத்தில் தெரிவிக்க பயமாக இருக்கிறது என்றும், யாரிடமும் சொல்லாமல் செல்வதால் குடும்ப உறுப்பினர்கள் என்னை மன்னிக்குமாறும் உருக்கத்துடன் எழுதியிருந்தார். இது தொடர்பாக,காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற உயிரிழந்த மாணவியின் தாயார்,உறவினர்களிடம் கொடூரமாக நடந்து கொண்டதாக காவல் ஆய்வாளர் கண்ணதாசன் நேற்று இரவு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 

இந்நிலையில்,தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் கண்ணதாசன், சத்தமில்லாமல் மீண்டும் உள்ளே வந்து,மீண்டும் அதே தவறை செய்வார் என்றும் காவல்துறையில் நேரம் காலமில்லாமல் சிறப்பாக பணியாற்றுகிற அதிகாரிகளின் நற்பெயரையும் சேர்த்து இதுபோன்ற கயவர்கள் கெடுத்துவிடமாட்டார்களா? என்றும் எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:  கரூரில் பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார்,உறவினர்களிடம் கொடூரமாக நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் நேற்று இரவு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மீது இதுவரை வழக்கு பதிவுசெய்யப்படவில்லை.

அதனைத்தொடர்ந்து உடனடியாக அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு நிரந்தர பணிநீக்கம் செய்யப்படவேண்டும். இது தொடர்பாக நேற்றே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகிய இருவருக்கும் புகார் அனுப்பியுள்ளேன். அந்த பெண்ணின் குடும்பத்திற்கு சட்டரீதியான உதவிகளை வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று எம்பி.ஜோதிமணி தெரிவித்தார்.

ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் இருந்திருக்கிறார். இரவு நேரத்தில் பாலியல் கொடுமையால் பெண்ணை பறிகொடுத்த கணவனை இழந்த ஒரு பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்திருக்கிறார். எழுத கூசும் வார்த்தைகளால் கேவலமாக பேசியிருக்கிறார் இரவுமுழுவதும் காவல் நிலையத்தில் பெண்களை இருக்க செய்திருக்கிறார்.

இரவு முழுவதும் உறவினர்களை லாக்கப்பில் வைத்து அடித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கவும் முயன்றிருக்கிறார். பாலியல் கொடுமைக்கு நீதிகேட்டு காவல்நிலையம் போனால் இதுதான் நடக்கும் என்றால் அந்த குடும்பம் என்னபாடு பட்டிருக்கும்?

இது தண்டனைக்குரிய குற்றமில்லையா? தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் சத்தமில்லாமல் மீண்டும் உள்ளே வந்துவிடுவார். மீண்டும் அதே தவறை செய்வார். காவல்துறையில் நேரம் காலமில்லாமல் சிறப்பாக பணியாற்றுகிற அதிகாரிகளின் நற்பெயரையும் சேர்த்து இதுபோன்ற கயவர்கள் கெடுத்துவிடமாட்டார்களா?  மேலும் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என்று எம்பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.