சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை, வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

kakanவடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் நிலையில் தமிழகத்தில் கனமழை பாதிப்புகளைத் தவிர்க்க, தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது .

அதனை தொடர்ந்து சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை, வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ரிப்பன் மாளிகையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது : தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.மேலும் சென்னையில் நேற்று கனமழை பெய்ததில் 50-60 சதவீதம் மழை நீர் நேற்றே வடிந்துவிட்டது. 317 பகுதிகளில் நேற்று நீர் தேங்கியிருந்த நிலையில் 140 இடங்களில் முழுமையாக தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது எனவும்  177 இடங்களில் மட்டும் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் தெரிவித்தார் . கொரட்டூர், மாம்பலம் பகுதியில் நேற்று இருந்த்தைக்  காட்டிலும் நீரின் அளவு குறைந்துள்ளது. நாளை காலை பல இடங்களில் நீர் முழுமையாக அகற்றப்பட்டுவிடும்  என  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார் .

ஒரே நாளில் இன்று மாநகராட்சி மூலம் மொத்தம் 7 லட்சத்துக்கு 16 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும்  மாநகராட்சி சார்பில் 58 இடங்களில் பொதுமக்கள் தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார் .

இதனை தொடர்ந்து  மாநகரில் 16 சுரங்கப் பாதைகளில் இரண்டை தவிர மற்ற இடங்களில் நீர் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் விடப்பட்டுவிடும் என்றும் மற்றும் 10, 11 தேதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என ஆணையர் ககன்தீப் சிங் கூறினார்.

மாநகராட்சி சார்பில் மின் மோட்டர், ஜேசிபி வாங்க 4 கோடி ரூபாய் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் 41 இடங்களில் படகுகள் தயார் நிலையில் உள்ளது . அதுமட்டுமில்லாமல்  மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1913, ஒரே சமயத்தில் 30 நபர்கள் தொடர்பு கொள்ளும் விதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஆணையர் தெரிவித்தார் .

மழை நேரத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் சென்னையில் 3400 நபர்கள் மலேரியா தடுப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகளிலும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கன மழையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாள்தோறும் முறையாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 50 விழுக்காட்டினர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை ஆதலால் அவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார் .