“என்னை மன்னித்து விடுங்கள், உங்க வீட்டுல இருந்து பணத்தை எடுத்துக்கொள்கிறேன்.. எனக்கு இப்போது உடல் நிலை சரியில்லை” என்று, ஒரு பாசக்கார திருடன் ஒருவன், வீடு புகுந்து திருடிவிட்டு நெஞ்சை உருக வைக்கும் வகையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகில் இருக்கும் எடப்பால் பகுதியை சேர்ந்த ஷம்சீர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இவர், தனது குடும்பத் தேவைக்காக அதுவும் அவசரத் தேவைக்காக, வீட்டில் இருந்த மனைவியின் நகைகளை அருகில் உள்ள நகை அடகு கடையில், அவற்றை அடகு வைத்துவிட்டு, அதன் மூலமாக பெற்ற பணத்தை தனது வீட்டில் வைத்திருந்தார். 

இப்படியான சூழலில், ஷம்சீர் வீட்டில் பணம் இருப்பதை தெரிந்துகொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவன், அந்த வீட்டில் யாருமில்லாத நேரத்தில், பணம் இருந்த அறைக்குள் சென்று உள்ளார்.

அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் 67 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்ட அந்த திருடன், அங்கிருந்து செல்ல முயன்றபோது, அவனது மனசாட்சி உறுத்தி உள்ளது.

இதனால், தனது தவறுக்கும் வருத்தம் தெரிவிக்கும் வகையில், அதே நேரத்தில் மன்னிப்பும் கேட்கும் வகையில், அந்த திருடர் குலத் திலகம், தனது மனசு கேட்காமல், அங்கிருந்த ஒரு பேப்பரை எடுத்து, ஒரு காதல் கடிதம் போல், தனது தரப்பு விளக்கத்தை அதில் எழுதியிருக்கிறார். அதன் பிறகே, அந்த திருடன், திருடிய பணத்துடன், அந்த வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இதனையடுத்து, தனது வீட்டிற்கு திரும்பிய ஷம்சீர், பணம் வைக்கப்பட்டிருந்த பீரோ திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

அத்துடன், பணம் இருந்த இடத்தில் ஒரு கடிதமும் இருந்துள்ளது. அதனை எடுத்து படித்த ஷம்சீர்,  அந்த கடிதத்தில் “என்னை மன்னித்து விடுங்கள். உங்க வீட்டுல இருந்து நான் பணத்தை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு, இப்போது உடல் நிலை சரியில்லை. நடக்கக் கூட முடியலைன்னா பாருங்களேன்!

என்னை உங்களுக்கு நன்றாக தெரியும். நான் யாருன்னு இப்போ குறிப்பிட விரும்பலை. நான் வீட்டுக்குத் திருட வரும் போது, ஷாம்னா குளிச்சுட்டு இருந்தாங்க. உங்க அம்மா உள்ள இருந்தாங்க. இந்த லெட்டரை இங்க வச்சிருக்கேன். 

விரைவில் பணத்தை திரும்பி கொடுத்து விடுகிறேன். ஆனா, அதுக்கு கொஞ்சம் கால அவகாசம் எனக்கும் வேண்டும். எங்க வீட்டுலயும் இது யாருக்கும் தெரியாது. ரொம்ப அவசரத் தேவைக்காக எடுத்திருக்கேன். தயவு செஞ்சு என்னை மன்னித்து விடவும்” என்று, அவர் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தைப் படித்ததும் சற்று அதிர்ச்சியடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் ஷம்சீர், “பணத்தை எடுத்தவர்கள் தனக்கு தெரிந்தவர்கள் தான் இந்த வேலையை பார்த்திருக்கிறார்கள்” என்பதை தெரிந்துகொண்டார். 

அதே நேரத்தில், அந்த பணம் அவருக்கும் அவசர தேவையாக இருந்த காரணத்தால், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சங்கரம் குளம் போலீசார், இந்த திருட்டு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.