“தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வட கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

சென்னையில் கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு ஒரே நாளில் அதிக பட்சமாக 23 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் இன்னும் சில மாவட்டங்களிலும் கன முதல், மிக கன மழை வரை கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், வட கிழக்கு பருவமழையின் தீவிரம் இன்று முதல் நாளை மறுதினம் வரை இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில், வங்க கடலில் ஏற்கனவே அறிவித்தபடி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 

அதாவது, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதிக கன மழையும் பெய்யக்கூடும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

குறிப்பாக, “அதிக கனமழையாக 20 சென்டி மீட்டர் முதல், 25 சென்டி மீட்டர் வரை பெய்யக்கூடும் என்பதால், இந்த 8 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ரெட் அலர்ட்” தற்போது விடுக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 21.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

மேலும், “திருவாரூரில் மாவட்டத்தில் 18.5 சென்டி மீட்டர் மழையும், வலங்கைமானில் 12.2 சென்டி மீட்டர் மழையும், மன்னார்குடியில் 14 சென்டி மீட்டரும், தரங்கம்பாடியில் 15.8 சென்டி மீட்டரும், சீர்காழியில் 12.7 சென்டி மீட்டரும், மணல்மேடு பகுதியில் 12 சென்டி மீட்டரும், கொள்ளிடத்தில் 11.4 சென்டி மீட்டர் மழையும் தற்போது வரை பதிவாகி உள்ளதாக” வானிலை ஆய்வு மையும் தெரிவித்து உள்ளது.

அத்துடன், சென்னையில் தற்போது வரை பல்வேறு இடங்களில் ஒரு சில பகுதியில் மழை பெய்து வருகிறது. 

அதே போல், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சீ புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதே போல், “நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்” வானிலை ஆய்வு மையும் தெரிவித்து இருக்கிறது.

“கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய இடங்களில் 12 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரையில் கன மழை பெய்யக்கூடும் என்பதால், குறிப்பிட்ட இந்த பகுதிகளுக்கு மட்டும் நிர்வாக ரீதியாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.