வங்க கடலில் அந்தமான் அருகே வரும் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த 25 ஆம் தேதி துவங்கியது. இதையடுத்து, தமிழகத்தின் டெல்டா, வட கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதையடுத்து தென்கிழக்கு வங்க கடலில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் வட கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. யாரும் எதிர்பாரதவிதமாக பெய்த இந்த கனமழையில், சென்னையின் பல்வேறு இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 

கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, திடீரென கொட்டித் தீர்த்த கனமழையில் தேங்கிய மழைநீரால், சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. முன்னறிப்பு ஏதும் இன்றி பெய்த மழையால், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் மின்சார, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்க பெறாமல் தவித்து வருகின்றனர்.

v1

இந்தநிலையில், தென்கிழக்கு வங்க கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று 12 மணியளவில், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. தற்போது வங்கக்கடலில் உள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலைகொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னையில் இருந்து 850 கி.மீ தூரத்தில் நீடிக்கிறது. இது வடமேற்கில் நகர்ந்து நாளை சென்னை கடலூர் அருகே கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என கூறப்படுகிறது.  வங்கக்கடலில் தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. நாகைப்பட்டினம், திருப்பூண்டியில் அதிகளவாக தலா 31 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்தநிலையில், வங்கக்கடலில் நவம்பர் 13-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தகவல் வெளியாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரமடையும் என கூறப்படுகிறது. 

v2

எனினும்,மழை பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஏனெனில்,நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி முழுமையாக கடந்து சென்ற பின்னரே, நவம்பர் 13 ஆம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியினால் ஏற்படும் மழை குறித்த தகவல் தெரிய வரும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பெய்து வரும் கனமழை, மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. புதிதாக உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுமா, இல்லை கடலிலேயே வலுவிழக்குமா என்பதை சென்னை வானிலை ஆய்வாளர்கள் தற்போது கண்காணித்து வருகின்றார்கள்.