விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நினைவாக நவம்பர் 29 ஆம் தேதி முதல், நாடாளுமன்றத்தை நோக்கி 500 விவசாயிகள் அமைதியான முறையில் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கம் தற்போது அறிவித்து உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய விவசாயிகளின் போராட்டமானது, கிட்டதட்ட 11 மாதங்களை கடந்து, தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் இன்னும் 16 நாளில் ஒரு ஆண்டை நிறைவு செய்ய இருக்கிறது.

இது வரை மத்திய அரசுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றும், அதில் எந்தவித சுமூக முடிவும் எட்டப்படாமல் படுதோல்வியில் முடிந்து போனது. இதனால், விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு துளியும் இறங்கி வரவில்லை என்றே விமர்சிக்கப்பட்டு நிலையில், இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர் கட்சிகள் எல்லாம் குரல் கொடுத்து வருகிறது.

எனினும், மத்திய அரசு இதுவரை துளியும் இறங்கி வராமல், விவசாயிகளின் கோாரிக்கைளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதாலும், “தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” என்றும், விவசாயச் சங்கங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.

மத்திய அரசின் இந்த விடாப்பிடியான போக்கைக் கண்டித்து, நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணியும் கடந்த காலங்களில் நடத்தினார்கள். அப்போது, ஆளும் பாஜக அரசை விவசாயிகள் இந்த நாடாளுமன்ற முற்றுக்கை போராட்டம் சற்று அசைத்து பார்த்தது என்றே கூறலாம்.

அத்துடன், 3 புதிய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், இந்த பிரச்சினையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. 

மேலும், முன்னதாக கடந்த 18 ஆம் தேதி கூட “விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொள்ளப்பட்ட சம்பவத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று, வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கியமாக பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை ஆக்கிரமித்து தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தான், மத்திய அரசு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி வரை விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், இதில் எந்த பயனும் ஏற்படவில்லை.

இதனால், போராட்டத்தில் எந்த வித பின்னடைவும் இன்றி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், வீரியமாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் வருகிற 26 ஆம் தேதியுடன், ஓராண்டை எட்டும் நிலையில், தங்களது போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு வந்த நிலையில், இது குறித்து மத்திய அரசுக்கு விவசாயிகள் கடந்த மாதம் மிக கடுமையான எச்சரிக்கையும் விடுத்தனர். 

ஆனாலும், இதுவரை மத்திய அரசு இறங்கி வராத நிலையில், நாடாளுமன்றத்தை குளிர்காலத் தொடரின் போது, நாடாளுமன்றத்தை தினமும் முற்றுகையிட விவசாய சங்கங்கள் திட்டமிட்டு உள்ளன.

இது குறித்து டெல்லி அரியானா எல்லையில் உள்ள சிங்கூவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர்கள், “நவம்பர் 29 ஆம் தேதி முதல் 500 விவசாயிகள் தினமும் நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர்களில் பேரணியாக சென்று அமைதியான முறையில் கட்டுப்பாட்டுடன் போராட்டம் நடத்த உள்ளதாக” கூறினர்.

அதே போல் “டெல்லி எல்லையில் விவசாயிகள் பெரும் திரளாக திரண்டு போராட்டத்தை வலுப்படுத்த இருப்பதாகவும்”, விவசாயிகள் கூறிவருகின்றனர். இதனால், விவசாயிகள் போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளதால், ஆளும் பாஜக அரசு “அடுத்து என்ன செய்யலாம்?” என்று யோசனையில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.