தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களான பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் ஆகியோரிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றியவர் நடன இயக்குனர் கூல் ஜெயந்த். மேலும் பல திரைப்படங்களில் பாடல்களுக்கு கூல் ஜெயந்த் நடனமாடி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கதிர் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்து மெகா ஹிட்டான காதல் தேசம் திரைப்படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானார் கூல் ஜெயந்த். காதல் தேசம் திரைப்படத்தில் இடம்பெற்ற “முஸ்தபா முஸ்தபா” மற்றும் “காதல் தேசம்” ஆகிய பாடல்கள் இவரது நடனத்தை இயக்கத்தை கவனிக்க வைத்தது.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நட்சத்திர நடிகர் நடிகைகளுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வந்த கூல் ஜெயந்த் இன்று திடீரென காலமானார். சென்னையில் வசித்துவந்த நடன இயக்குனர் கூல் ஜெயந்த் நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

தொடர்ந்து புற்று நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த கூல் ஜெயந்த் சிகிச்சை பலனின்றி இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். மறைந்த நடன இயக்குனர் கூல் ஜெயந்த் அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை  நடைபெற உள்ளன. இயக்குனர் கூல் ஜெயந்தின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.