இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலக கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடிய இந்திய அணி, இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகள் என தொடர்ந்து 2 போட்டிகளிலும் படுதோல்வியை தழுவி,  அரையிறுதிக்கு கூட நுழையாமல் வெளியேறியது.

இதனால், இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, இந்திய வீரர்களை இணையத்தில் வசைப்பாடினார்கள்.

அத்துடன், “ஐபிஎல் போட்டிகளுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளிப்பதால் தான், இந்திய அணிக்கு இப்படி ஒரு தோல்வி” என்றும், இணையத்தில் பல ரசிகர்களும் ஐபிஎல்லுக்கு எதிராக கொந்தளித்து எழுந்தனர். 

எனினும், இந்திய ரசிகர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

என்றாலும், ஆறுதல் வெற்றியுடன் டி20 தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறி உள்ளது. இதனால், கோலியின் கேப்டன்ஷிப் சகாப்தம் இந்த உலக கோப்பை தோல்வியுடன் முடிவடைந்து இருக்கிறது. அதாவது, 'இந்தத் தொடருடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக” ஏற்கெனவே விராட் கோலி அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக, இனி நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள் முதல் இனி வரும் எல்லா போட்டிகளுமே புதிய கேப்டனாக ரோகித்சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி பற்றிய வீரர்களின் விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. 

அதாவது, இந்தியா - நியூசிலாந்து  அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டியானது, வரும் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. 

2 வது 20 ஓவர் போட்டி 19 ஆம் தேதி ராஞ்சியிலும், கடைசி மற்றும் இறுதி போட்டி 21 ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் தான், நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்து உள்ளது.

அதன் படி, ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்று உள்ளனர்.

மேலும், இந்தத் தொடரில் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில், கடந்த 2010 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து அணி, மீண்டும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தற்போது இருக்கிறது. 

அதே நேரத்தில், கடந்த 2007, 2016 ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி, இந்த முறை இறுதி சுற்றுக்குள் நுழைய கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்றைய போட்டி ரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.