சமீபத்தில் தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த தீபாவளி விருந்தாக வெளியாகி, கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் தொடர்ந்து குடும்பம் குடும்பமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.முன்னதாக அண்ணாத்த ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

மருத்துவமனையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சமயத்தில் முன்னணி கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். இந்நிலையில் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை உருக்கமாக ஆடியோ பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

இதுகுறித்து ட்விட்டரில் “நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை புனீத்” என குறிப்பிட்டு Hoote App-ல் கமாக பேசிய பதிவையும் இணைத்துள்ளார். அந்தப் பதிவில், 

“அனைவருக்கும் வணக்கம்! சிகிச்சை முடிந்து நான் நன்கு குணமாகி வருகிறேன்... நான் மருத்துவமனையில் இருந்தபோது புனீத் ராஜ்குமார் அவர்கள் அகால மரணமடைந்தார்... இந்த தகவல் எனக்கு 2 நாட்கள் கழித்துத் தெரியவந்தது... அதை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்... மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது... என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை... திறமையான, அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை... நல்ல பேரும் புகழும் உச்சியில் இருக்கும் பொழுது இந்த சிறிய வயதில் நம்மை விட்டு மறைந்த புனீத் ராஜ்குமாரின் மறைவு கன்னட திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை... புனீத் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் நன்றி!” 

என தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரங்கல் பதிவு இதோ…