தக்காளி கிலோ 90 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

thakali

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.அது மட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர் மழை காரணமாக சில இடங்களில் தக்காளியின் விலை 100 ரூபாயையும் தாண்டி விற்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பருவமழைக்கு முன்னதாக 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, நேற்று ரூ.70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை ஏற்றத்தை கண்டு பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி செய்தியாக உள்ளது .


இந்நிலையில்  தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக இருப்பதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தினால்  விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளியின் விலையை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் வெங்காயம் விலையும் 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் இருந்து வரும் வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வெங்காயம் விலை கிலோ 100 ரூபாயை எட்டும் என்று கூறப்படுகிறது.