முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் கொடுத்து அவரது உயிரை காப்பாற்றிய அவருடைய அண்ணன் மகள் லீலாவதி இன்று காலமானதை அடுத்து அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

leelavati

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிறுநீரகம் கொடுத்தவர் லீலாவதி. கேரளாவில் இருந்த லீலாவதி தனது சித்தப்பா எம்ஜிஆருக்கு சிறுநீரகம் கொடுக்க சென்னை வந்தார் என்பதும் அவர் சிறுநீரகம் கொடுத்ததே பல மாதங்கள் எம்ஜிஆருக்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடுமையான உடல் நல பாதிப்புக்குள்ளான எம்ஜிஆர் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிர் பிழைக்க தனது கிட்னியை தானமாக தந்து ஒரு கிட்னியுடன் 37 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணியின் மகள் லீலாவதி உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.

தமிழக முன்னாள் முதல்வராக 1977-ல் பதவி ஏற்ற எம்ஜிஆர் தனது 60 வது வயது வரை ஆரோக்கியமாக இருந்தார். அரசியல் சூழல் அதிக உழைப்பு அவர் உடல் நலனை பாதித்தது. 1984 அக்டோபர் 5-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டார். அப்போது, எம்ஜிஆருக்கு காய்ச்சல், சளி மற்றும் லேசான ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக அப்போலோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது. எம்ஜிஆர் உடல் நிலைக்குறித்து அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் கவலை அடைந்தனர். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கண்ணீர் சிந்தினர், ஆலயம் தோறும் பூஜைகள், பிரார்த்தனைகள் நடந்தது. பிரதமர் இந்திரா நேரில் வந்து பார்த்தார்.

இந்நிலையில் 1984 அக்டோபர் 13-ம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆர் உடல்நிலை தேறிவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட எம்ஜிஆர்
அப்போலோவில் அமெரிக்க மருத்துவர் குழு எம்ஜிஆரை சோதித்தது, ஜப்பான் டாக்டர் கானு சென்னை வந்து எம்ஜிஆர் உடல் நிலையை சோதித்தார். மருத்துவர்கள் பரிந்துரைப்படி எம்ஜிஆர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எம்ஜிஆருடன் ஜானகி அம்மையார், ஹண்டே உட்பட 21 பேர் தனி விமானத்தில் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குச் சென்றனர்.

மேலும் எம்ஜிஆருக்கு உடனடியாக சிறுநீரகம் தேவைப்படுகிறது என்பதை அறிந்த கேரளாவில் வசித்த எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி. சக்ரபாணியின் மகள் லீலாவதி உடனடியாக தான் சிறுநீரக தானம் செய்வதாக அறிவித்து எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தை தானம் செய்தார். இதனால் எம்ஜிஆர் பூரண நலம் பெற்றார். 1985 பிப்ரவரி 4ஆம் தேதி 3 ஆம் முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகம் திரும்பினார் எம்ஜிஆர். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கிட்னி தானம் செய்து ஒற்றைக் கிட்னியுடன் 37 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் லீலாவதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார். லீலாவதியின் மரணம் அதிமுக தொண்டர்கள், எம்ஜிஆர் விசுவாசிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய சிறுநீரகத்தை அளித்து, எம்ஜிஆரை வாழவைத்த லீலாவதி அம்மையார் 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து இன்று இயற்கை எய்தியதை அறிந்த எம்.ஜி.ஆரின் கோடானுகோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது. லீலாவதி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்று  ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.