தமிழ் திரையுலகின் இன்றியமையாத நகைச்சுவை நடிகராக வளர்ந்துள்ள நடிகர் யோகிபாபு, நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட், தல அஜீத்துடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன்  அயலான், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, விஷாலுடன் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ள யோகிபாபு, பொம்மை நாயகி , காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

முன்னதாக கிருமி பட இயக்குனரும் பிரபல படத்தொகுப்பாளருமான அனுசரண் முருகையன் இயக்கத்தில் யோகிபாபு & கருணாகரன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பன்னிகுட்டி. இப்படத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான திண்டுக்கல்.ஐ.லியோனி, சிங்கம் புலி, KPY ராமர், டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பன்னிகுட்டி திரைப்படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைக்க, சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பன்னிக்குட்டி திரைப்படத்தின் தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான 11:11 புரோடக்சன்ஸ் கைப்பற்றியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள பன்னிகுட்டி திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.