தமிழகத்தில் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள்  அமைக்க அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

chakarapani

இந்தியா முழுவதும் மாதிரி சமூதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த டெல்லியில் இன்று மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்றார்.

உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், கருணாநிதி கண்ட பட்டினியில்லா தமிழ்நாட்டை உருவாக்கவும், முதல்வரின் ஆணைப்படி வருங்காலத்தில் 500 சமூதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்று அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் இதர பேரிடர் காலங்களிலும் இந்த உணவகங்களில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். 
 

அதனைத்தொடர்ந்து  கூட்டத்தில் அமைச்சர் ஆர்.சக்கரபாணி  கூறியதாவது: தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உளளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தி வருகிறது. தரமான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன் மூலம் வழங்கி வருகிறது. இந்த எண்ணிக்கை மாவட்டத் தலைநகரங்களிலுள்ள மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவும் உறவினர்கள். நண்பர்கள் மற்றும் வெளி நோயாளிகளின் நலன் கருதி நடத்தப்படும் உணவகங்களையும் உள்ளடக்கியதாகும். 

இந்நிலையில் இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் பல்வகை சாதங்கள்  5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன. 1.6.2021 முதல் 18.11.2021 வரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த உணவகங்கள் வழியாக பயனடைந்துள்ளனர் என தெரிவித்த அமைச்சர் 30,490 கட்டுமான தொழிலாளர்களும் பயனடைந்துள்ளனர். கொரோனா காலத்திலும் இதர பேரிடர் காலங்களிலும் இந்த உணவகங்களில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதே போன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கபட உள்ளன. இந்த திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் வரை 2021-22ம் நிதியாண்டில் 3227 மெட்ரிக் டன் அரிசியும் 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது .

மேலும் ஒரு உணவகம் நடத்த சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ .3.5 லட்சம் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அனைவருக்கும் விரிவுபடுத்திடவும் மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 ன் கீழ் 100 விழுக்காடு நிதி உதவி வழங்கிட வேண்டும் என அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்தார் .