மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்படும் விவசாயிகள் போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை வெற்றியுடன் நிறைவு செய்திருக்கிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய விவசாயிகளின் இந்த மாபெரும் போராட்டமானது, இன்றுடன் ஒரு வருடத்தை வெற்றியுடன் நிறைவு செய்திருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி வேளாண் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ப்பட்டது. அதன் பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாகவும் மாறியது. 

ஆனால், மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், “டெல்லியை நோக்கி செல்வோம்” என்ற கண்னட முழக்கத்துடன் போராட்டத்தை தொடங்கினர். 
இந்த விவசாயிகளுடன் ராஜஸ்தான், உத்திரப் பிரதேச விவசாயிகளும் இணைந்து போராடியதால், விவசாயிகளின் இந்த போராட்டம் நாடே திரும்பிப் பார்க்கும் மாபெரும் போராட்டமாக மாறியது. 

அத்துடன், இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் விவசாயிகள் நடந்திய டிராக்டர் பேரணியானது, செங்கோட்டையை நோக்கிய போராட்டம் உலகம் முழுவதும் பெரும் கவனத்தை பெற்றது.

அதே நேரத்தில், டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு கடந்த ஒரு ஆண்டுகளாக இடைவிடாமல் தொடர்ந்து போராடி வந்த இந்தா போராட்டத்தில் சிலர் தற்கொலை செய்தும், கடும் குளிர் என்றும் கிட்டதட்ட 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். 

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற்ற மிகப் பெரிய வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொலை செய்தார். அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். 

அத்துடன், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான ரத்து மசோதாவிற்கும் ஒன்றிய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டங்கள் முறைப்படி ரத்து செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும், “குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும்” என்று விவசாயிகள் கூறிய நிலையில், விடப்படியாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

அத்துடன், தற்போது ஏற்கனவே அறிவித்த படி, இன்றும் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

“வரும் 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டரில் பேரணியாக செல்லும் போராட்டம் குறித்து 27 ஆம் தேதி ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்” என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். 

மேலும், ஓராண்டு நிறைவடையும் விவசாயிகளின் இந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில், டெல்லியின் எல்லைகளில் ஏராளமான போராட்டக்காரர்கள் காலை முதல் திரண்டு வந்துகொண்டு இருக்கின்றனர். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் இன்றைய தினம் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால், டெல்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் மிகவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன் எப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப் பெரிய வெற்றிபெற்றதை போல், டெல்லியில் விவசாயிகளின் போராட்டமும் மிகப் பெரிய வெற்றியை பெறவுள்ளது உலகம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.