இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 3-வது உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கான முதல் உலக கோப்பையை கைப்பற்றியது.

இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்வு பாலிவுட்டில் 83 என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 83 படத்தை இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார். அஸ்வின் மிஸ்ரா ஒளிப்பதிவில், ப்ரீதம் மற்றும் ஜூலியஸ் பக்கியம் இசையமைத்துள்ளனர்.

83 படத்தில் கபில்தேவ்-ஆக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க, கபில் தேவின் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான ஜீவா, தமிழகத்தை சார்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாக 83 திரைப்படத்தின் ரிலீசுக்காக இந்திய அளவில் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி 83 ரிலீசாகிறது. தமிழில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் Y NOT ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. முன்னதாக 83 படத்தின் ட்ரைலர் வருகிற நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முன்னோட்டமாக 83 படத்தின் புதிய டீசர் வெளியானது. அந்த டீசர் இதோ...