தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

rr

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல  மாவட்டத்தில் கடந்த வாரம் முதல்  கனமழை பெய்தது. மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அதன் பிறகு மழை ஓய்ந்ததால் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து வந்தது. 

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது. பயிர்கள் நீரில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. எனவே உடனடி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டும் என  கோரப்பட்டிருந்தது.

இதற்கிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் மத்திய மந்திரி அமித்ஷாவும் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார். அதன்படி, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களைப் பாா்வையிட மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ராஜீவ் ஷா்மா தலைமையில் 7 போ கொண்ட குழு, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சென்னை வந்தடைந்தது. இந்த குழுவில் விவசாயம், நிதி, நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 

இதற்கிடையில், சென்னை வந்தடைந்த மத்திய குழுவினர், தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய்த் துறை, மின் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை, வேளாண்துறை, நிதித்துறை, ஊரக உள்ளாட்சி துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், இரண்டு குழுக்களாக பிரிந்து இன்று ஒரு குழுவானது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், மற்றொரு குழு கன்னியாகுமரிக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகின்றது.
நாளை ஒரு குழு, கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களுக்கும், மற்றொரு குழு வேலூா், ராணிப்பேட்டைக்கும் செல்ல உள்ளது. இந்த குழுக்களை வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி, வருவாய்த் துறை செயலாளா் குமாா் ஜெயந்த் ஆகியோா் ஒருங்கிணைத்துள்ளனர். தமிழகத்தில் மழை வெள்ள (TN Rain) பாதிப்புகள், புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமாக மத்திய குழுவிற்கு விளக்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட நாட்களில் மழை அதிகமாக பெய்ததாகவும், சென்னையில் 778 இடங்களில் மழை நீர் தேங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஆய்வு முடிந்தவுடன் நவ.24-ம் தேதி மத்திய குழுவினா், முதல்வா் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்கிறாா்கள். மத்திய அரசின் ஆய்வுக்குப் பின்னா் தொடா்புடைய குழு அலுவலா்களிடம் கலந்து ஆலோசித்து தமிழகத்தில் ஏற்பட்ட மழை சேத பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.