ஆடு திருடர்களை விரட்டிச்சென்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை, 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் சேர்ந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த 55 வயதான பூமிநாதன், திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 

இப்படியான சூழலில் தான் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான பூமிநாதனும், நவல்பட்டு தலைமை காவலர் சித்திரைவேலுவும் நேற்று முன் தினம் இரவு தனித்தனியே இருசக்கர வாகனத்தில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அதிகாலை 1.30 மணி அளவில் பூலாங்குடி காலனி பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வந்து உள்ளனர். அதில், ஒரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களின் கையில் ஒரு ஆடு இருந்து உள்ளது. 

இதனை பார்த்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், அவர்கள் நின்ற பகுதிக்கு விரைந்து சென்று உள்ளார். அப்போது, அந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த ஆட்டை அங்கேயே விட்டு விட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று உள்ளனர். 

இதனையடுத்து, ஆடு திருடர்களை பூமிநாதன், விரட்டிச் சென்று உள்ளார். அப்போது, அந்த திருடர்கள் அங்கள்ள பள்ளத்துப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரும் வழியில் தப்பிச் சென்ற போது, அங்குள்ள ரயில்வே தரைப்பாலத்தில் அருகில் சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அந்த திருடர்களை மடக்கி தடுத்து நிறுத்தினார்.

அப்போது, அந்த திருட்டு கும்பல், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனின் தலையில் சரமாரியாக  வெட்டி உள்ளனர்.

இதில், அவர் தலையில் பலத்த காயத்துடன், பூமிநாதன் அப்படியே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சற்று நேரத்தில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, அங்கு வந்த சக போலீசார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், திருடர்களை விரட்டிச் சென்ற காட்சிகள் எல்லாம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.

அதனை ஆய்வு செய்த போலீசார், கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டனர். 

இந்த நிலையில் தான், சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான பூமிநாதனை கொலை செய்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் அதிரடியாக தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

குறிப்பாக கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களில் ஒருவனுக்கு 10 வயதும், மற்றொரு சிறுவனுக்கு 17 வயதும், மற்றொரு இளைஞனுக்கு 19 வயதும் நடந்துக்கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்

இதனிடையே, கொலை செய்யப்பட்ட பூமிநாதனின் உடல், சோழமா தேவி கிராமத்தில் நேற்று மாலை துப்பாக்கி குண்டுகள் முழங்க சக போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.