“சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மீண்டும் கன மழை பெய்யும்” என்று, வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. 

இந்த பெரும் மழையால், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துக்கொண்டு, பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இவற்றுடன், சென்னையில் மழை வெள்ளம் குறையவே சில நாட்கள் ஆனது. அதன் தொடர்ச்சியாக, அந்தமான் கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது. 

இது அறிவிப்பு, சற்றே சென்னைவாசிகளை நிம்மதி பெரு மூச்சு விட செய்தது.

இந்த நிலையில் தான், “காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, சென்னையில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக” வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென் கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக தென் மேற்கு வங்க கடல் வரை 4.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களில் இன்றைய தினம் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்” சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதன் படி, “ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்” வானிலை மையம் கூறியுள்ளது. 

மேலும், “தமிழகத்தில் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்றும், கூறியுள்ளது.

அதே போல், “திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்” கூறப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மிக முக்கியமாக, “வரும் 17, 19 ஆம் தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டி உள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்” என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.