தமிழக சின்னத்திரையில் பல முன்னணி தொலைக்காட்சிகளில் பிரபலமான பல ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராகவும் நடுவராகவும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்த சாண்டி மாஸ்டர், விஜய் தொலக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி 2-ம் இடம் பிடித்ததோடு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். 

இதையடுத்து தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். 3:33 படத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடித்துள்ளார். சாண்டியுடன் இணைந்து ஸ்ருதி செல்வம் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடிக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாம்பூ ட்ரீ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நம்பிக்கை சந்துரு 3:33 திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் 3:33 திரைப்படத்திற்கு, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்க, சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் 3:33 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்று வெளியானது.

முன்னதாக கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி 3:33 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள 3:33 திரைப்படம் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.