“துபாயில் இருந்து இந்தயா திரும்பிய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான 2 வாட்சுகள் பறிமுதல்” செய்யபட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது, இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பந்து ஒன்று அவரது தோள்பட்டையில் பலமாக தாக்கியது. 

இதனால், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, பந்து தாக்கிய இடம் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இதனால், அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, அவர் தொடர்ந்து போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்குகூட நுழைய முடியாமல் இந்திய அணி பாதிலேயே நடையை கட்டியது. 

இதனால், துபாயில் இருந்து பாண்ட்யா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்பினார்கள். 

அப்போது, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம், மும்பை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் பணம் செலுத்தியதற்கான உரிய ரசீதுகள் எதுவுமில்லாத 2 வாட்சுகளை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

குறிப்பாக, கிட்டதட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த 2 வாட்சுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி இணையத்தில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக, இணையத்தில் பலரும் பல விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தான், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தரப்பில் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

இது தொடர்பாக ஹர்த்திக் பாண்ட்யா தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் துபாயில் இருந்து சட்டப் பூர்வமாக வாங்கிய அனைத்து பொருட்களையும் தானாக முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவித்தேன். 

நான் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தயாராக இருந்தேன். நான் எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமோ அதற்கான மதிப்பீட்டை சுங்க இலாகா அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். அதை நான் செலுத்துவதை ஏற்கனவே உறுதி செய்து உள்ளேன்.

குறிப்பாக, “எனது கடிகாரத்தின் விலை 5 கோடி ரூபாய் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. ஆனால், அதன் தோராயமான விலை 1.5 கோடி ரூபாய் மட்டுமே” என்றும், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, டிவிட்டரில் விளக்கம் அளித்து உள்ளார்.