பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 2.O.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.O படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன்-2 திரைப்படத்தை ஷங்கர் தொடங்க, விபத்து மற்றும் சில காரணங்களால் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து தமிழில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்து மெகா ஹிட்டான இயக்குனர் ஷங்கரின் அந்நியன் திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்க, ஷங்கர் இயக்குவதாகவும் அறிவித்தார். முன்னதாக தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் RC15 திரைப்படத்தை தொடங்கினார் ஷங்கர்.

ராம்சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, நவீன் சந்திரா மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க, முன்னணி ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் தமன்.S இசைமைக்க, பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

சமீபத்தில் கோலாகலமாக பூஜையுடன் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடன இயக்குனராக முன்னணி நடன இயக்குனர் ஜானி இணைந்துள்ளார். தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கும் ஜானி நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.