முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் விவகாரத்தில் புகார்தார‌ர் விஜய் நல்லதம்பி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ராஜேந்திர பாலாஜி கடல் வழியாகவும் தப்ப செல்ல முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடல் மார்கமாக தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, கடலோரப்  பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

“முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமும், அவரது உதவியாளரிடமும் பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, 1 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததாகவும், இது தவிர அதிமுக கட்சி பணிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 3 கோடியே 10 லட்சம் கொடுத்ததாகவும்” முன்னாள் அதிமுக நிர்வாகியான விஜய நல்லதம்பி குற்றச்சாட்டினார். 

இந்த “பணத்தை எல்லாம் பெற்றுக்கொண்டு பிறகு அரசு வேலையும் வாங்கித்தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக” முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த மாதம் 15 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அவர் தலைமறைவான நிலையில், அவரை பிடிக்க 8 தனிபடைகளும் அமைக்கப்பட்ட நிலையில், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

தற்போது, வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமார்ந்த மேலும் ஒருவர், ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் அளித்துள்ளார்.

இந்த சூழலில் தான், முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்துல் மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கு பதில் மனுவாக தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடல் வழியாக தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. 

இதன் காரணமாக, கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, தூத்துக்குடி முதல் வேதாரணியம் கடற்கரை வரை கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மீனவ கிராமங்களில் சோதனை நடத்தவும் காவல் துறை தற்போது திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல், விமானம் மூலம் ராஜேந்திர பாலாஜி தப்பிச்செல்வதைத் தடுக்கும் விதமாக, நேற்று நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.