தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் என்னும் கொரோனா வைரஸ் வேகம் எடுத்து வருகிறது. இந்த ஒமைக்ரான் வகையிலான வைரஸ், இந்தியாவிலும் சற்று வேகமாகவே பரவத் தொடங்கி உள்ளது.

அதாவது, தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரசானது, உலகின் சுமார் 105 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தற்போது வரை பரவி உள்ளது. இதனால், உலக மக்கள் பலரும் கடும் பீதியடைந்து உள்ளனர்.

அதே போல், இங்கிலாந்து உள்ளிட்ட சில முக்கிய ஐரோப்பிய நாடுகளிலும் ஒமைக்ரான் தொற்று வைரசானது, பரவத் தொடங்கி உள்ளது.

அதன் தொடர்ச்சியாகவே, இந்தியாவிலும் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

அதுவும், தமிழகத்தில் 1ல் இருந்து 34 ஆக ஒமைக்ரான் பாதிப்பு உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவிலேயே அதிகம் ஒமைக்ரான் பாதித்த மாநில பட்டியலில் தமிழகம் நேற்றைய தினம் 3 வது இடத்திற்கு வந்தது.

குறிப்பாக, இந்தியாவில் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தான், ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மத்தியப் பிரதச மாநில அரசு அறிவித்து உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநில அரசும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் தான், “தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா?” என்பது பற்றி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ வல்லுநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை, மருத்துவதுறை சார்ந்த வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு,  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுனர் குழுவினர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்கள் தரப்பு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக, “ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ளலாம்? என்றும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? அல்லது இரவு நேர ஊரடங்கு மீண்டும் தமிழ்நாட்டிற்குத் தேவையா?” என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

அத்துடன், “மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஒமைக்ரான் பரவாமல் தடுப்பதற்கு அறிவிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் ஆகியவை பற்றியும்” இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இப்படியாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், இன்றைக்குள் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.