தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு 2 படத்தில் இடம்பெற்ற ஒரு குச்சி ஒரு குல்பி மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் இடம்பெற்ற ஒரு சட்டை ஒரு பல்பம் ஆகிய பாடல்களைப் பாடியுள்ள பிரபல கானா பாடகர் சரவெடி சரண் கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்ந்து பல சுயாதீன கானா பாடல்களை பாடி வெளியிட்டு வந்த சரவெடி சரண் சிறுமிகளை ஆபாசமாக சித்தரித்து சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கொச்சையான  வார்த்தைகளை கொண்ட பாடலை வெளியிட்டார். டோனி  ராக் எ போட்டி கானா என்ற பெயரில் அவர் வெளியிட்ட இந்தப் பாடலில் கேட்கக் கூசும் அளவுக்கு மிகவும் அசிங்கமான வார்த்தைகள் கொண்ட அந்த பாடல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பலரும் சமூக வலைத்தளங்களிலும் போலீசிலும் இந்த பாடலை  கண்டித்து புகாரும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார் திருவள்ளூர் காவல்துறை கவனத்திற்கு வர, திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் இந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் இவர் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார் சரவெடி சரணை கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்று வரும் காலத்தில் நடக்கும் வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வுகளுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வசதியாக மக்கள் புகார் பதிவு செய்ய தொலைபேசி எண்ணையும் வழங்கியுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள சரவெடி சரண் மீது போக்சோ சட்டத்தில் 16 ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.