போனி கபூர் தயாரிக்க H.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது வலிமை. இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சரியான நேரத்தில் அறிவிப்பு வரும் என்று படக்குழு தெரிவித்திருந்தாலும் ரசிகர்கள் விட்டபாடில்லை.

சமீபத்தில் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக சந்தித்த ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் பற்றி கேட்டதையும் அதற்கு அஜித் சொன்ன பதிலையும் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அதில், பிப்ரவரி மாதம் அனைத்து தகவல்களும் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது வெப்சைட்டை இன்று அறிமுகப்படுத்தியிருக்கும் யுவன் ஷங்கர்ராஜா அதில் வலிமை படத்தின் அப்டேட்டை செய்தியாக பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, வலிமை படத்தின் அஜித்தின் ஓபனிங் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் குத்துப் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இதற்காக ஒரிசாவிலிருந்து பாரம்பரியமிக்க ட்ரம்ஸ் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இந்தப் பாடலில் பணிபுரிந்திருக்கிறார்கள். கொண்டாட்டமிக்க பாடலாக வந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். 

வலிமை திரைப்படத்தின் மூலம் 8-வது முறையாக அஜித் - யுவன் கூட்டணி இணைந்துள்ளது. மங்காத்தாவில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்திருந்த நிலையில் அந்தப் படத்துக்கு யுவனின் இசை மிகவும் பொருந்திப்போய் இன்று வரை ரசிகர்கள் கொண்டாடும் இசையாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் வலிமையில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கும் அஜித்துக்கு இசையமைக்கிறார் யுவன். எனவே படத்திற்கும் யுவனின் இசைக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.