சேலத்தில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய தினம் காலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கு, பிரசாரத்தை முடித்த பிறகு அங்கிருந்து கார் மூலம் இன்று மாலை 4 மணிக்கு சேலம் வருகிறார்.

அங்கிருந்து ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் செல்கிறார். அங்கு, கட்சி நிர்வாகிகளுடன், “வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படிப் பணி ஆற்ற வேண்டும்? மக்களிடம் திட்டங்களைக் கூறி எவ்வாறு வாக்குகள் கேட்க வேண்டும்?” என்பது உள்ளிட்டவை பற்றி, அவர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு, தொண்டர்களுக்கு ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களையும் அவர் வழங்க இருக்கிறார். 

அதன் பிறகு, இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து அங்கேயே தங்குகிறார். அதன் தொடர்ச்சியாக, நாளைய தினம் வியாழக் கிழமை காலை சேலத்தில் இருந்து கார் மூலமாகத் திருப்பூர் செல்லும் அவர், அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு அங்கிருந்து மீண்டும் சேலத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்குகிறார்.

அதன் பிறகு, 12 ஆம் தேதி சேலத்தில் இருந்து கார் மூலமாகப் புறப்பட்டு 2 வது நாளாக திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், சேலத்தில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி வீடுகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, காவல் துறையின் அவசர எண் 100 க்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், “சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டு” தனது தொடர்பைத் துண்டித்து இருக்கிறார். 

இதனால், பதறிப்போன காவல் துறையினர் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துக்கொண்டு, முதலமைச்சரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 
முதலமைச்சரின் வீட்டைச் சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினார்கள். அப்போது, வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், காவல் துறைக்கு வந்த தகவல், முற்றிலும் பொய்யானது என்பது தெரிய வந்தது.

முக்கியமாக, பிரபலங்களின் வீடுகளுக்கு இது போன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் சமீப காலமாகத் தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 

முதலமைச்சர் பழனிசாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதுவும் இன்று இரவு அவர் சேலம் வீட்டில் வந்து தங்க உள்ள நிலையில், இதனைத் தெரிந்துகொண்ட மர்ம நபர், அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.