மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்த கணவன், அந்த உடலை சாக்கு மூட்டையில் கொண்டு சென்ற போது போலீசாரிடம் வசமாகச் சிக்கிக்கொண்ட 
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்து உள்ள திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகில் இருக்கும் ராமநாதபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த தேவேந்திரசிங் என்பவர், உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவர்.

இவருடைய மனைவி சாயா என்பவருடன், கடந்த 8 மாதங்களாகத் தான் இந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள். அத்துடன், இதே பகுதியில், உத்திரப் பிரசேதம் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவரும் தங்கியிருந்து உள்ளார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்குச் சென்று வந்தனர். 

அப்போது, அவர்கள் 3 பேரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மனோஜோடு தேவேந்திரசிங் நெருக்கமாகப் பழகி இருக்கிறார். இந்தப் பழக்கம், நெருக்கமான நிலையில், தேவேந்திரசிங் மனைவி சாயாவுக்கும், மனோஜுக்கும் அப்போது கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, கணவன் தேவேந்திரசிங் வேலைக்குச் செல்லும் நேரம் பார்த்து, அவர் மனைவியும், கணவனின் நண்பன் மனோஜ் ஆகிய இருவரும் சேர்ந்து அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த கள்ளக் காதல் உறவு தொடங்கிய அடுத்த சில மாதங்களிலேயே மனோஜ், தன் கள்ளக் காதலி சாயா மேல் காம பைத்தியம் பிடித்துத் திரிந்திருக்கிறார். 

இப்படியாக, சமீபத்தில் நண்பன் இல்லாத நேரம் பார்த்து சாயாவின் வீட்டிற்கு மனோஜ், வந்திருக்கிறான். அப்போது, “உன் கணவன் தேவேந்திரசிங்கை விட்டு விட்டு, என்னுடன் இப்போதே நிரந்தரமாக வரவேண்டும்” என்று, அழைத்திருக்கிறார் மனோஜ். 

ஆனால், இதற்கு சாயா மறுத்திருக்கிறார். இதனால், கலக்கமடைந்த மனோஜ், எப்படியாவது அவரை முழுமையாக அடைந்து விட வேண்டும் என்ற காம வெறி தலைக்கு ஏறிய நிலையில், “நீ என்னுடன் வர வில்லை என்றால், நாம் இருவரும் எடுத்துக் கொண்ட ஆபாசப் படங்களை உன் கணவன் தேவேந்திர சிங்கிடம் காட்டி விடுவேன்” என்று, மிரட்டியிருக்கிறார். இதனால், கள்ளக் காதலர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது.

அந்த நேரம் பார்த்து வெளியே சென்றிருந்த தேவேந்திரசிங் திடீரென வீட்டுக்குள் வந்து உள்ளார். அப்போது, தன் மனைவியுடன் மனோஜ் இருப்பதைக் கண்டு கடும் ஆத்திரம் அடைந்த அவர், அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து, மனோஜை சரமாரியாகத் தாக்கி உள்ளார். அத்துடன், ஆத்திரம் தீராமல், தன் மனைவியின் முன்னாடியே, அங்கு கிடந்த சுத்தியலால் மனோஜை கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், அங்கேயே உயிரிழந்தார்.  

இதனையடுத்து, இந்த கொலையை மறைக்க கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து, மனோஜின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி உள்ளனர். 

அத்துடன், நள்ளிரவு நேரத்தில் அதை எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போட்டு விட வேண்டும் என்று முடிவு செய்து, அதன் படியே, தங்களது இருசக்கர வாகனத்தில் அந்த உடலை கட்டி எடுத்துச் சென்று உள்ளனர்.

அப்போது, காட்டூர் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து புயல் வேகத்தில் வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்த முயன்று உள்ளனர். ஆனால், அவர்கள் வண்டியை நிற்காமல் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்று உள்ளனர். 

இதனால், சந்தேகமடைந்த போலீசார், அந்த ஸ்கூட்டியை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது, அந்த வண்டியை ஓட்டிச்சென்றது கணவனும் - மனைவியும் என்பது தெரிய வந்தது. 

அவர்களிடம் பெரிய சாக்கு மூட்டை ஒன்று இருப்பதைப் பார்த்த போலீசார், அந்த சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்து உள்ளனர். அதில், பழைய துணிகளுக்கு நடுவில், ரத்த காயங்களோடு 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

இதனையடுத்து, கணவன் - மனைவி இருவரையும் போலீசார் கையும் களவுமாகக் கைது செய்து. தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தான், மனைவியின் கள்ளக் காதல் விசயம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.