“அல்லாவின் மகிழ்ச்சிக்காகக் குழந்தையை கொன்றதாகச் சொன்ன பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. 

கேராள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, தன்னுடைய 6 வயது மகனை கழுத்தை அறுத்துக் கொன்ற தாயார் ஒருவர், “அல்லாவின் மகிழ்ச்சிக்காகக் கொன்றதாகப் பரபரப்பு வாக்குமூலம்” அளித்து சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், “6 வயது மகனைக் கொன்ற கொடூர தாய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தற்போது வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலத்தில் 6 வயது மகனை கழுத்தை அறுத்து ஒரு பெண் கொலை செய்துள்ளார். 

அந்தப் பெண் கடவுளுக்காக தன் குழந்தையைப் பலி கொடுத்ததாகத் தகவல் சொல்லியுள்ளார்” என்பதைக் குறிப்பிட்டு உள்ளது.
 
“இது மூட நம்பிக்கையின் உச்சகட்டமான ஒரு செயல்” என்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வன்மையாகக் கண்டித்து உள்ளது.

“குழந்தையைக் கொன்ற அந்த பெண்ணிற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்றும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை வற்புறுத்தி உள்ளது.

அத்துடன், “மனிதர்கள் கடவுளுக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை இஸ்லாம் மதம், எந்த காலத்திலும் அனுமதிப்பதில்லை என்றும், வணக்க வழிபாடு செய்வதாக இருந்தாலும் தங்களை தாங்களே வருத்திக் கொண்டு வணக்க வழிபாடு செய்வதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.” என்றும், குறிப்பிட்டு உள்ளது. 

மேலும், “முஹம்மது நபி(ஸல்) கீழ்கண்ட அனைத்தையும் தடை செய்துள்ளார்கள்” என்று குறிப்பிட்டு அதனைப் பட்டியல் இட்டுள்ளது. 

“அதன் படி, 

- நீண்ட நெடிய தூரம் கடவுளுக்காக நடந்து செல்வது.
- வெயிலில் நின்று தன்னைத்தானே வருத்திக் கொண்டு கடவுளுக்கு நேர்ச்சை செய்வது
- இறைவனுக்காக ஒருவர் திருமணம் புரியாமல் துறவறம் இருப்பது. 
- இரவு நேரங்களில் முழுமையாக நின்று வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது.
- இறைவனுக்காகக் காலம் முழுக்க நோன்பு வைக்கக் கூடியது.

தன்னைத் தானே வருத்திக் கொள்வது, தன்னுயிரைக் கடவுளுக்காக அர்ப்பணிப்பது, பிற உயிர்களைக் கடவுளுக்கு நரபலி தருவது என்ற அனைத்தையும் இஸ்லாம் தடுத்துள்ளது என்றும், இது போன்ற மூட நம்பிக்கைகளை இஸ்லாம் எந்த ஒரு இடத்திலும் சொல்ல வில்லை” என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது.

முக்கியமாக, “இது மிகப் பெரிய மூட நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது தெரிவித்து உள்ளார்.