மதுரையில் எப்போது எந்தெந்த இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாகக் காலம் காலமாகப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகத் திகழ்கிறது.  

இந்த உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து தடையின்றி நடத்துவதற்கென்று தனியாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடந்த 
2017 ஆம் ஆண்டு வெளியிடப்படப்பட்டு, அது முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பல கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்குத் தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது இந்தப் போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் தமிழக அரசு அப்போதே சில கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தது. 

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு, நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அத்துடன், எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு, நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது என்றும், தமிழக அரசு குறிப்பிட்டு, அது தொடர்பான சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வௌியிட்டு இருந்தது. 

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக, மதுரையில் எப்போது எந்தெந்த இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன் படி, “மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற” உள்ளன. 

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பான பணிகளை மதுரை மாவட்ட காவல் 
கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் ஆய்வு வந்து மேற்கொண்டார். 

அப்போது, காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள், பார்வையாளர்கள் அமரும் கேலரிகள், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள் உள்ளிட்டவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.

மேலும், மதுரையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் முன்னதாக நடைபெற்றது. அதில், வரும் 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின் படி, போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, கடந்த ஆண்டு தனி நீதிபதி தலைமையில் அரசே முன்னின்று நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.