தமிழக சட்டமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டு உள்ளதாகவும், சென்னையில் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழ் நாட்டில் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. தேர்தல் காரணமாக, தமிழ்நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. 

முக்கியமாக, மாவட்ட வாரியாக தொகுதிகளைத் தேர்வு செய்வது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் தற்போது விறுவிறுப்பு அடைந்து உள்ளன.

அதே நேரத்தில், பாஜக கூட்டணி வைத்துள்ள அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் முதலமைச்சர் பழனிசாமி தான்” என்று, அக்கட்சியின் தலைமை அறிவித்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இதனை ஏற்க மறுக்கும் பாஜக மூத்த தலைவர்கள், தங்களது கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜகவின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்று தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். ஆனாலும், இதற்குப் பதிலடி தரும் வகையில் அதிமுகவின் சில முக்கிய அமைச்சர்கள் கூறி வந்தாலும், அவர்களால் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தமிழகத்தில் 38 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை டெல்லியில் உள்ள பாஜக தலைமைக்கு, தமிழக பாஜக அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதில், சென்னையில் மட்டும் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 32 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், மொத்தமாக 38 தொகுதிகளில் பாஜக இந்த முறை போட்டியிட விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலை அதிமுக தலைமைக்கு பாஜக தலைமை விரைவில் அனுப்ப உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளன. 

அதே போல், சற்று நேரத்திற்கு முன்னதாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவை பொறுத்த வரை எங்கள் நிலைப்பாடு மாறாது” என்று, கூறியுள்ளார்.

அத்துடன், “அதிமுக வின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும்” என்றும், மீண்டும் ஒரு முறை தற்போது அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

இதனால், அதிமுக - பாஜக இடையே, யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பது குறித்து ஒரு பெரும் பனிப்போரே நடைபெற்று வருகிறது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிவித்தாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, அதிமுக - பாஜக இடையே, கூட்டணி குறித்தும், யார் முதலமைச்சர் வேட்பாளர்? என்பது குறித்தும், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், “இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி நிலைக்குமா? என்பது பெரும் கேள்வியாக எழுந்த நிலையில், பாஜக தனித்துப் போட்டியிடத் திட்டமிடுகிறதா?” என்கிற கேள்வியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.