முன்னாள் கிரிகெட் வீரர் கங்குலியை அரசியலில் சேரக் கோரி கடும் நெருக்கடி அளிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போதைய பாஜக பட்டாளம் என்பது சினிமா கலைஞர்களால் நிரம்பி வழிகிறது. அதே போல், தேசிய அளவிலும், பாஜகவில் பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களால் நிரம்பிக்கொண்டு இருக்கிறது.

அது நேரத்தில், தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலியை, அரசியலில் சேரக் கோரி குறிப்பிட்ட தேசியைக் கட்சியைச் சேர்ந்த தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக செய்திகள் வெளியானது.

அந்த நேரத்தில் தான், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, சவுரவ் கங்குலி மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாகவும், தகவல் வெளியானது.

அத்துடன், இது குறித்து ஆளுநர் ஜக்தீப் தன்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டு இருந்தார். அதில், “இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனுக்கு கங்குலி தன்னை அழைத்தார் என்றும், அதற்கு நான் ஒப்புக்கொண்டுள்ளேன் என்றும், இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை” என்றும், அவர் கூறியிருந்தார். 

மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, அரசியலில் களமிறங்கப் போவதாகவும், தேசிய கட்சியான பாஜக வில் சேர போவதாகவும் அப்போது வெளிப்படையாகவே பேசப்பட்டன. அது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியானது. 

முக்கியமாக, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்காளத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் கங்குலி பாஜக தரப்பு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவார் என்று, கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. அப்போது தான், ஆளுநர் உடனான கங்குலியின் சந்திப்பு, அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்து போனது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த சனிக் கிழமை காலை லேசான 
நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி, அவசரமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு, கங்குலிக்கு 
ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  

அப்போது, மருத்துவமனையில் இருந்த கங்குலியை அம்மாநில முதலமைச்சர் மம்தா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், “அரசியலில் இணைய வலியுறுத்தி கங்குலிக்கு கடும் நெருக்கடி அளிக்கப்படுவதாக” மேற்கு வங்காளத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 
கட்சியின் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அசோக் பட்டாச்சார்யா, “முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி அரசியலில் இணைய வேண்டும் என்று அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியாக கங்குலியைப் பயன்படுத்திக் கொள்ள சிலர் திட்டமிட்டே விரும்புகிறார்கள். 

இது கங்குலிக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இதன் காரணமாகவே அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, அவர்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருக்கலாம்” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், “கங்குலியை அரசியலில் சேரக் கூறி அழுத்தம் கொடுக்கக் கூடாது” என்றும், அசோக் பட்டாச்சார்யா கேட்டுக்கொண்டார். 

“கடந்த வாரம் கங்குலி என்னிடம் பேசிய போது கூட நான் அவரிடம், 'அரசியலுக்கு வராதீர்கள், அரசியலில் சேரக்கூடாது' என்று தெரிவித்தேன். அதற்கு கங்குலி என் கருத்துக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை” என்று குறிப்பிட்டார். இந்த செய்தி வெளியாகி, மேற்கு வங்காள ஊடகங்களில் பெரும் வைரலானது.

இதனையடுத்து, இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ், “சிலர் எல்லாவற்றிலும் அரசியலைப் பார்க்கின்றனர். 

அவர்களின் மோசமான மனநிலையே இதற்குக் காரணம். கங்குலியின் லட்சக்கணக்கான ரசிகர்களைப் போலவே நாங்களும் அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றே விரும்புகிறோம்” என்று, கூறினார்.