தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அதிமுக பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகியிருக்கிறது. மற்ற கட்சிகளின் கூட்டணி முடிவு, தொடர் இழுபறியில் தான் உள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தலில் திருப்புமுனையாக இருந்த அசதுத்தீன்  ஒவைசியின் தமிழக வருகைக்கு, திமுக கூட்டணியில் இருக்கும் சில சிறுபான்மை கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஒவைசி குறித்தும், தமிழக தேர்தல் நிலவரங்கள் குறித்தும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் அரசியல் ஆய்வாளர் டாக்டர். சையது.

அசதுத்தீன் ஒவைசி தமிழக மக்களிடத்தில் பெரிய அளவில் பரிச்சயம் இல்லாத அரசியல்வாதி.. இவ்வாறு இருக்கையில் கூட்டணி கட்சிகளையும் எதிர்த்துக்கொண்டு அவரை திமுக கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்க என்ன காரணம்?


 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, பாஜக எதிர்ப்பு அணிகளை ஒன்றினைக்க திமுக தலைமையில், தேசிய கட்சிகள், பிற மாநிலங்களின் பிராந்திய கட்சிகளை இணைந்து ஒரு பிரம்மாண்ட கூட்டம் நடைப்பெற்றது. பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்கும் திமுகவின் அந்த முயற்சி வெற்றி பெற்றதை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிந்தது.
இதேப்போல் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றினைக்கும் முயற்சியிலான கூட்டம் தான் இதயங்களை இணைப்போம். அதற்கு ஒவைசிக்கு மட்டும் அல்ல.. அனைத்து இஸ்லாமிய அமைப்புகளுக்குமே மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருந்தார். ஒரு பக்கம் கூட்டணி தர்மம்.. மறுபக்கம் வகுப்புவாத கட்சிகளுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் முயற்சியில் திமுக இருந்தது. 


ஒவைசியின் வருகைக்கு இங்கு இருக்கும் சில இஸ்லாமிய கட்சிகள் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வந்தது. அதனால் மு.க ஸ்டாலின் கூட்டணி தர்மத்துக்கு முக்கியவதும் கொடுத்து, ஒவைசிக்கு கொடுத்த அழைப்பை திரும்ப பெற்றுக்கொண்டார்.  மேலும் ஒவைசி தமிழக இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அரசியல்வாதி தான். 


திமுகவின் கூட்டணியில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளை பயமுறுத்தி குறைந்த தொகுதிகளை ஒதுக்க தான் திமுக, ஒவைசியை பயன்படுத்துவதாக தோன்றுகிறது என்று இந்திய தேசிய லீக் கட்சி தரப்பில் இருந்து சொல்லப்பட்டு இருக்கே..?


ஒவைசி அழைத்து வந்து தான், இங்க இருக்க கூடிய சிறுபான்மை கட்சிகளை மிரட்டி குறைவான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற சூழல் திமுகவுக்கு இல்லை. அதேபோல் இப்படி ஒரு வியூகத்தை ஏற்றுக்கொள்ள கூடியது அளவுக்கு, ஒவைசியின் அரசியல் விழிப்புணர்வும் பலவீனமானது இல்லை. 


திமுக.. ஒவைசியுடன் சுமூகமான போக்கும், இங்கு இருக்கும் சிறுபான்மை கட்சிகளுடன் முரண்பட்டு இருப்பது போல் தெரிகிறதே..?! ஒவைசியும் திமுகவுடன் இணைய விருப்பம் தெரிவித்து இருந்தார். அப்போ திமுக கூட்டணியில் ஒவைசியை எதிர்ப்பார்க்கலாமா?


தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலம் இருக்கிறது. மற்ற கட்சிகளின் அணுகு முறையை பொருத்து தான், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் யார் கூட்டணியில் இருப்பார்கள் , யார் இருக்க மாட்டார்கள் என்று முடிவாகும். ஆனால் இப்போது ஒவைசியை அழைத்தது, கூட்டணிக்காக இல்லை. 


பீகார் தேர்தலில் ஒவைசியின் வெற்றி, ஒரு விபத்தில் நடந்தது என்று வட இந்திய அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கிறதே ..


பீகார் தேர்தலுக்கு, ஒவைசி தொடர்ந்து உழைப்பை கொட்டினார். மேலும் மக்கள் செல்வாக்கு பெற்ற  எம்.எல்.ஏகள் ஒவைசியின் கட்சியில் இணைந்தார்கள். சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து அவர் குரல் கொடுத்து வந்தார். பீகாரில் பல தொகுதிகளின் தேர்தல் முடிவை தீர்மானிப்பது இஸ்லாமியர்களில் வாக்குகள் தான். இந்த காரணங்களால் தான் ஒவைசி வெற்றி பெற்றார். ஒரு விபத்தில் வெல்வது எல்லாம் தேர்தலில் நடக்காது என்றாலும் கூட பீகார் போல் ஒவைசியின் தேவை தமிழகத்தில் இருக்குமா என்பது சந்தேகம் தான்.


திருமாவளவன் தனி சின்னத்தில் நிற்க போவதாக அறிவித்து இருக்கிறார். இந்த வியூகம் விசிகவுக்கு எவ்வளவு சாதகமாக அமையும்?


ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் சின்னம் என்பது ஒரு மிக பெரிய பங்காக இருக்கும். சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிக கடினமான வேலை. தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னாடி, ஒரு சின்னத்தை பெற்று அதை மக்களிடம் பிரபலப்படுத்துவது சுலபம் இல்லாத காரியம். சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கும் நிலையில்.. இந்த முடிவு எதிரிகளுக்கு சாதகமாக முடிய நேரலாம். அதனால் ஏற்கனவே நல்ல பரிச்சயமான சின்னத்தில் நின்று வெற்றி பெற்று செல்வது தான் நல்ல யுக்தியாக இருக்கும். 


மு.க.அழகிரியின் ஆதரவளர்கள் கூட்டத்தில், ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது , எனக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என பேசியிருக்காரே? 


ஆறு வருடமாக அரசியலில் ஈடுப்படாமல் இருந்தவர்.. தேர்தல் நேரத்தில் இப்படியாக பேசுவதை மக்கள் எந்த அளவுக்கு சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. இன்று திமுக முழுவதுமாக மு.க ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரை எதிர்த்து அரசியல் செய்வது அழகிரிக்கு மிக கடினமாக இருக்கும். அவரால் பெரிய தாக்கம் ஏற்படாது. ஸ்டாலின் முதல்வராக கூடாது என்று நினைப்பவர்கள் அழகிரியை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவரை தவறா வழிநடத்தி பலியாக்க முயற்சிகிறார்கள்.


ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என்ற சொன்னவர், விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருக என்ற போஸ்டர்களை பார்ப்பார்.


யார் முயற்சி செய்கிறார்கள்..? பி.ஜே.பியா?


யார் என்று குறிப்பிட்டு சொல்வதற்கு இன்னும் ஆதாரம் கிடைக்கவில்லை. ஆதாரம் கிடைக்கும் போது நிச்சயம் வெளியில் சொல்வோம்.


கலைஞரிடம் என்னை பற்றி தவறாக சொல்லிக்கொடுத்தது விட்டார்கள் என்கிறார் அழகிரி.. ஸ்டாலினை சொல்கிறாரா?


ஒருவர் தப்பா சொல்லிக்கொடுத்து, அதை வைத்து முடிவு எடுக்க கூடிய தலைவர் கலைஞர் இல்லை. எந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருக்கும் அளவுக்கு அவர் புத்திசாலி. அவரிடம் தவறாக சொல்லிக்கொடுத்தார்கள் என்பது அவருடைய ஆளுமையை குறைசொல்வது போல தான் இருக்கும்.


கமல்ஹாசன் தீவரமாக பிரச்சாரம் செய்கிறாரே.. திமுகவுக்கு அதிமுக , பிஜேபியை தவிர்த்து இப்போது கமலும் சவாலா இருக்கிறாரா? 


கமல், அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்கவே இன்னும் தயங்கிக்கொண்டு இருக்கிறார். தேர்தல் அறிக்கையை சொன்னால் காப்பி அடித்துவிடுவார்கள் என்கிறார். அவருடைய அரசியல் நிலைப்பாட்டில், மக்கள் மிகவும் குழம்பியிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சீமான் போல கருத்துகளை பேசிக்கொண்டு இருக்கிறார் கமல். அதனால் சீமானுக்கும் கமலுக்கும் தான் தேர்தல் களத்தில் போட்டி இருக்கும்.