ஜனவரியில் ஒமைக்ரான் அலை வீசக்கூடும் என தொற்று நோய் நிபுணர் மருத்துவர் நரேஷ் புரோகித் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக  உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் கொரோனாவின்  கோரப்பிடியில் இருந்தே இன்னும் உலக நாடுகள் மீண்டு வராத சூழலில்,  ஒமிக்ரான் என்னும் புதிய வகை கொரோனா  மக்களை  அலற வைக்கிறது.  

டெல்டா வைரசிலிருந்து 30-க்கும் மேற்பட்ட  திரிபுகளாக உருமாற்றமடைந்திருக்கும் ஒமிக்ரான்  ஜெட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.  கடந்த 24-ம் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட  ஒமிக்ரான் அதற்குள்ளாக 79 நாடுகளுக்கு பரவியுள்ளது.

டெல்டா வைரசுடன் ஒப்பிடுகிறபோது 70 மடங்கு வேகத்தில் பரவும், இதன் பாதிப்பு உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தும் என்றும்  உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

omicron india high risk

தடுப்பூசிகளின் வீரியத்தைக் குறைத்து வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும், கவலைக்குரிய வைரஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாதது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று விஞ்ஞானிகள் கூறி வந்த நிலையில், இங்கிலாந்தில் முதல் ஒமிக்ரான் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இது மக்களை மேலும் பீதிக்குள்ளாகியிருக்கிறது.

ஒமிக்ரான் அதிபயங்கரமானது, நோய் எதிர்ப்பு திறனுக்கு தப்பிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வந்தன. உலகமெங்கும் ஒமிக்ரான் வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. 

இந்நிலையில் கேரளாவில் கோழிக்கோட்டில் அமைந்துள்ள கே.எம்.சி.டி. மருத்துவக் கல்லூரியில் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் உத்திகள் பற்றி இணைய வழியில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. 

இதில் பிரபல தொற்றுநோய் நிபுணரும், தேசிய தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகருமான மருத்துவர் நரேஷ் புரோகித் சில தகவல்களை வெளியிட்டார். 

அதில் ஒமிக்ரான் பரவலின் வேகம் டெல்டாவை விட அதிகம் என்றும், ஜனவரியில் ஒமிக்ரான் அலை வீசக்கூடும் என்று தெரிவித்தார். 

மருத்துவர் நரேஷ் புரோகித் வெளியிட்ட தகவல்கள்:-

“டிசம்பர் 2-ந் தேதி இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு 2 பேருக்கு மட்டுமே இருந்தது. டிசம்பர் 14-ந் தேதி 45 பேருக்கு பாதிப்பு. 16-ந் தேதி 77 பேருக்கு பாதிப்பு. ஆக 14 நாளில் 36 மடங்காக பெருகி உள்ளன.

ஜனவரியில் ஒமிக்ரான் அலை வீசக்கூடும். ஒமிக்ரான் நோயாளி அதிவேக பரவலராக மாறி ஒமிக்ரானை பரப்பலாம். ஒமிக்ரான் ஏற்கனவே 77 நாடுகளுக்கு பயணித்திருக்கிறது. 

omicron india high risk

அதுவும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 3 வாரத்தில் இது நடந்திருக்கிறது. ஒமிக்ரான் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும்கூட, காட்டுத்தீ போல பரவுவது, உலகமெங்கும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு பெருத்த சவாலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. 

யாரும் ஒமிக்ரானை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இன்னும் ஏராளமானவர்களை தொற்றுவதின் மூலம் மிகக்கொடிய நோயாக மாறலாம், மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஒமிக்ரான் வைரஸ் கடந்த கால நோய்த்தொற்றின் மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் தடுப்பூசியால் கிடைத்த நோய்த்தொற்றுகளில் இருந்து தப்பிக்க முடியும். 

இதனால் ஒமிக்ரான் திரிபின் ஒட்டுமொத்த அச்சுறுத்தல் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்” இவ்வாறு அவர் கூறி உள்ளார்.