டெல்லி, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானாவிலும் ஒமிக்ரான் வைரஸ் கால் பதித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா எனும் கொடிய வைரஸ் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. 

இந்த கொரோனா வைரசை அழிப்பதற்கான ஒரே ஆயுதமான தடுப்பூசி கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. உலகம் முழுவதும் பல்வேறு வகையிலான தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 

இந்த தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் அதே வேளையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது உருவை மாற்றி வெவ்வேறு வகையிலான வைரசாக உருவெடுத்து தலைவலி கொடுத்து வருகிறது.

அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோன்றின. இதில் டெல்டா வகை கொரோனா உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சூழலில் தற்போது அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 

telangana omicron cases register

ஆனால் மக்கள் இதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் மற்றொரு உருமாறிய கொரோனா வைரஸ் வந்துவிட்டது. ஒமிக்ரான் என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த மாதம் 24-ந் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

இந்த ஒமிக்ரான் வைரஸ் திரிபு டெல்டா வைரசை விட அதிக வீரியமிக்கது மற்றும் அதிவேகத்தில் பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. 

இந்த உருமாறிய ஒமிக்ரான் கொரோனா இங்கிலாந்து, ஹாங்காங், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அதிவேகமாக பரவ தொடங்கியது. இதையடுத்து விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இந்தியாவில் கடந்த 2-ந் தேதி ஒமிக்ரான் வைரஸ் முதல்முறையாக நுழைந்தது. 

அன்றைய தினம் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் 66 வயதான தென் ஆப்பிரிக்கர் மற்றும் 46 வயது பெங்களூரு மருத்துவருக்கு என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார் என மொத்தம் 8 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இந்த வைரஸ் நுழைந்திருக்கிறது. இதனால் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்திருந்தது. 

omicron variant

இந்நிலையில் குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மராட்டியம், சண்டிகர் மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானாவிலும் ஒமிக்ரானின் பாதிப்பு கால் பதித்துள்ளது.  தெலுங்கானா மாநிலத்தில் 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 12 ஆம் தேதி கென்யாவில் இருந்து தெலுங்கானா திரும்பிய 24 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவரது மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. 

இதேபோல் ஒமிக்ரான் தொற்று உறுதியான மற்றொருவர் சோமாலியாவில் இருந்து நாடு திரும்பிய 23 வயதான ஆண் ஆவார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று அபுதாபியில் இருந்து ஹைதராபாத் வழியாக மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் திரும்பிய 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. குழந்தையின் பெற்றோருக்கு தொற்று இல்லாத நிலையில் முர்ஷிதாபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் தவிர தென்னிந்தியா முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.