கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தனது மகள் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணி முகர்ஜி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவையே உலுக்கிய வழக்குகளில் ஒன்றாக திகழும் ஷீனா போரா கொலை வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு திருப்பங்களை கண்டு வருகிறது. மும்பை போலீசாரையும், சிபிஐ-யும் திணறடித்த இந்த வழக்கில் தனது மகளையே கொலை செய்ததாக ஊடகவியலாளர் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு ஆதரவாக இருந்ததாக இந்திராணியின் 3-வது கணவரும் கைதாகி கடந்த வருடம் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக அவரின் தாயார் இந்திராணி முகர்ஜி சிபிஐ-க்கு கடிதம் எழுதியிருக்கிறார். 

அந்தக்கடிதத்தில் “எனது மகள் ஷீனா போரா இன்னும் உயிருடன் இருக்கிறார். என்னுடன் சிறையில் இருந்த பெண் ஒருவர் ஷீனாவை காஷ்மீரில் பார்த்ததாகச் சொல்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்துங்கள்” என்று இந்திராணி அந்தக்கடிதத்தில் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

sheena bora indrani mukerjee murder case

இதன் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் பரபரப்படைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ளதாக சிபிஐ அறிவித்திருந்தது. மும்பை மெட்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வந்த 24 வயது இளம் பெண் ஷீனா போரா, கடந்த 24 ஏப்ரல் 2012 அன்று திடீரென மாயமானார். 

அன்றைய தினம் தனது அலுவலக பணியை ராஜினாமா செய்வதாக ஷீனா போரா எழுதிய கடிதம் கிடைத்தது. அன்றைய தினமே தான் காதலித்து வந்த ராகுல் முகர்ஜியுடன் காதலை முறித்துக் கொள்வதாக ராகுல் முகர்ஜியின் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் சென்றது. அதன் பிறகு ஷீனா போரை யாரும் பார்க்கவில்லை.

திடீரென காதலை முறித்ததால் காதலர் ராகுல் சந்தேகமடைந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவரின் புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஷீனாவின் தாயார் இந்திராணியிடம் கேட்டதற்கு அவர், உன்னுடைய காதல் தொந்தரவுகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஷீனா அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார்.

ஆனால் ஷீனாவின் பாஸ்போர்ட் என்னிடம் உள்ளதே என ராகுல் கேட்டதற்கு, அவர் வேறு பாஸ்போர்டில் சென்றுவிட்டதாக இந்திராணி பதிலளித்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு ராகுல் அளித்த நெருக்கடியால் இந்திராணி முகர்ஜி விசாரிக்கபப்ட்ட போதும் இதே பதிலை தான் அவர் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்திராணியின் முதல் கணவர் சித்தார்த்தா தாஸ்-க்கு பிறந்தவர் தான் ஷீனா போரா. அவரை விவாகரத்து செய்துவிட்டு இந்திராணி முகர்ஜி, சஞ்சீவ் கண்ணா என்பவரை மணந்தார். இதன் மூலம் ஒரு மகனையும் பெற்றெடுத்துள்ளார். 

இதற்கிடையில் 2-வது கணவரையும் விவாகரத்து செய்துவிட்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜி என்பவரை இந்திராணி முகர்ஜி திருமணம் செய்தார். 
இந்த நேரத்தில் மகள் ஷீனா போரா மற்றும் மகன் இந்திரானியின் பெற்றோரிடம் வளர்ந்து வந்தனர்.

இந்நிலையில் பீட்டர் முகர்ஜியுடன் இந்திராணி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவர அதனைப்பார்த்து மகள் ஷீனா போரா தனது தாயிடம் மும்பையில் வீடு வாங்கி தருமாறு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

sheena bora murder case

இதையடுத்து தனது 3-வது கணவர் பீட்டரிடம், மகள் பற்றிய தகவலை மறைத்து ஷீனாவை தனது தங்கை என அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் இந்திராணி முகர்ஜி. இந்நிலையில்தான் விவாகாரத்தான பீட்டரின் முதல் மனைவியின் மகன் ராகுல் முகர்ஜியை ஷீனா போரா காதலித்து வந்துள்ளார்.

இந்த விஷயம் இந்திராணி முகர்ஜிக்கு தெரியவர முறையற்ற காதல் (அண்ணன்-தங்கை) என்பதால் அதனை அவர் எதிர்த்துள்ளார். இந்நிலையில் தான் திடீரென ஷீனா போரா மாயமானார். ஷீனா போராவை இரண்டாம் கணவருடன் சேர்ந்து கொண்டு இந்திராணி காரில் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும் இந்தக்கொலைக்கு கார் ஓட்டுநரும், 3-வது கணவர் பீட்டரும் உடந்தை எனவும் கூறப்படுகிறது. இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் 2015-ம் ஆண்டு வேறு வழக்கு ஒன்றில் கைதான போது தான் ஷீனா கொலை விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது.

அதேபோல ராய்கட் மாவட்டத்தில் வைத்து ஷீனாவின் உடலை எரித்து அப்புறப்படுத்தியதாகவும் கார் ஓட்டுநர் அப்ரூவர் ஆக மாறினார். 2015-ம் ஆண்டு இந்த வழக்கில் இந்திராணி முகர்ஜி, 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா, 3-வது கணவர் பீட்டர் முகர்ஜி, கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ரவி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

வழக்கு விசாரணையின்போதே 2019-ம் ஆண்டு 3-வது கணவர் பீட்டர், இந்திராணியை விவாகரத்து செய்ய, 2020-ம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் இருந்து பீட்டர் வெளியே வந்தார். இந்திராணி தற்போதும் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார். 

சிறையில் உள்ள இந்திராணியின் ஜாமீன் மனு மீதான விசாரனை நடைபெற்று வரும் நிலையில் திடீர் திருப்பமாக அவர் ஷீனா போரா உயிருடன் இருப்பதாகக் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.