குரங்கின் தலையானது, பாத்திரத்தில் மாட்டிக்கொண்டதால் அதனை எடுக்க முடியாமல் அந்த குரங்கு, இங்கும் அங்குமாக ஓடி பரிதவிக்கும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளன.

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் என்னும் பகுதியில், குரங்கு ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. 

அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு நேரத்தில் சமையலுக்குப் பயன்படுத்திய பாத்திரங்களை கழுவி வைப்பதற்காக, அந்த வீட்டின் முன்பு உள்ள பாத்திரம் கழுவும் இடத்தில் வைத்ததாகத் தெரிகிறது. அப்படியான பாத்திரங்களில் ஒரு பாத்திரத்தில் மட்டும் பாதி அளவு தண்ணீர் இருந்து உள்ளது.

ஆனால், அந்த பாத்திரத்தின் வாய் பகுதியானது, சற்று குறுகலாக இருந்து உள்ளது. இதனைக் கவனிக்காத தாகம் எடுத்த குரங்கு ஒன்று, தண்ணீர் தாகத்தால் அந்த பாத்திரத்தை அப்படியே எடுத்து தனது தலையை உள்ளே விட்டு தண்ணீரைக் குடித்து உள்ளது. 

தண்ணீரைக் குடித்து முடித்ததும், அந்த பாத்திரத்தில் இருந்து தனது தலையை வெளியே எடுக்க குரங்கு முயன்று உள்ளது. ஆனால், குரங்கின் தலையானது, அந்த பாத்திரன் வாய் பகுதியில் அப்படியே மாட்டிக்கொண்டு விட்டது. இதனால், அந்த குரங்கால், அந்த பாத்திரத்தில் இருந்து தனது தலையை அகற்ற முடியவில்லை. 

இதனால், பதறிப்போன அந்த குரங்கு, தனது தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரத்தை எடுக்க முடியாமல், தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரத்துடனேயே, அந்த ஊர் முழுக்க இங்கும், அங்குத்தாக சுற்றி வருகிறது. இந்த குரங்கின் பரிதாப நிலையைப் பார்த்த மற்றொரு குரங்கு, ஓடி வந்து, அந்த குரங்கிற்கு உதவி செய்யும் வகையில், குரங்கின் தலையில் உள்ள பாத்திரத்தை, தனது பலத்தைக் கொண்டு எடுக்க எவ்வளவோ முயன்றது. ஆனாலும், அந்த பாத்திரத்தை எடுக்க முடியவில்லை. அப்போது, அந்த குரங்கிற்கு வலி ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட அந்த குரங்கு, உதவி செய்ய வந்த குரங்கிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டது.

அத்துடன், அலுமினிய பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட அந்த குரங்கால் தற்போது சாப்பிட முடியாமல், வெளியே பார்க்க முடியாமலும், மூச்சு விடுவதிலும் சிரமப்பட்டு இருக்கும் அந்த குரங்கை பார்க்கவே பரிதாபப்பட்ட அந்த கிராம மக்கள், இந்த குரங்கின் நிலை குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். 

இது குறித்து, அந்த கிராமத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அலுமினிய பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட குரங்கைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, அந்த உள்ளூர் மக்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அனைவரும், குரங்கின் நிலை குறித்து தங்களது வருத்தங்களையும், பரிதாபங்களையும் கருத்துக்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.