இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவதற்காக, யூடியூப்பில் வசிய பூஜையை பார்த்து சுடுகாட்டிற்குச் சென்று மனித எலும்புக்கூடுகளை எடுத்து வந்து பூஜை செய்த இளைஞனால் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி  இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவை அடுத்து உள்ள குண்டல பள்ளி ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்த முரளி என்பவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். 

ஆனால், பணி முடிந்து வீட்டிற்கு வரும் முரளி, தினமும் இரவு நேரங்களில் சில செல்போன் எண்களுக்கு ராங் கால் பண்ணி பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி போனில் பேசும்போது, எதிர் முனையில் பேசுவது பெண்களாக இருந்தால், அவர்களிடம் “உங்கள் குரல் நன்றாக இருக்கிறது” என்று புகழ்ந்து பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

இப்படியாக, ராங் கால் பேசும் போது நல்கொண்டா மாவட்டம் குண்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு முறை பேசி அறிமுகம் ஆகி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 3 மாதங்களாக அந்த பெண்ணுடன் அவர் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். 

அந்தப் பெண்ணிடம் பேசும் போது, “நான் நடிகர் ராம் சரண்” போல் இருப்பேன் என்று, முரளி தன்னைப் பற்றி பெரிய பில்டப் கொடுத்து வைத்திருக்கிறார்.

இதனையடுத்து, இருவரும் கடந்த 3 மாதங்களாக ஆசை தீர பேசி வந்த நிலையில், “உங்களை நான் நேரில் சந்திக்க வேண்டும்” என்று, அந்த பெண்ணிடம் முரளி கேட்டிருக்கிறார். அதற்கு, அந்த பெண்ணும் நேரில் பார்க்க சம்மதம் தெரிவித்தார்.

அதன் படி, போனில் 3 மாதமாக பேசி வந்த இருவரும் நேரில் சந்தித்த நிலையில், அந்தப் பெண் திருமணம் ஆனவர் என்பது தெரிய வந்தது.

அது நேரத்தில், அந்தப் பெண்ணுக்கு முரளியை பார்த்து பெரிய அளவில் ஈர்ப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும், அந்த பெண்ணை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்த நினைத்த முரளி, “உனக்கு திருமணம் ஆனாலும் பரவாயில்லை, உன் கணவரை விட்டு விட்டு நீ என்னுடன் வந்துவிடு” என்று, பல ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார்.

இதனை ஏற்க மறுத்த அந்தப் பெண், முரளியை எப்படியோ ஏமாற்றி விட்டு தனது வீட்டுக்குச் சென்று விட்டார். 

இதனால், கோபம் அரைடந்த முரளி, அந்த பெண்ணை வசியப்படுத்தத் திட்டமிட்டு உள்ளார். 

இதனையடுத்து, “பெண்களை வசியப்படுத்துவது எப்படி? என்று, பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்களை தேடிப் பார்த்து உள்ளார்.

அப்படி, யூடியூப்பில் வீடியோக்களை பார்த்துவிட்டு, அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்குச் சென்று மனித எலும்புக்கூடுகள் மற்றும் வசியம் செய்ய தேவையான பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு இரவு நேரத்தில் வந்து பூஜை செய்து உள்ளார்.

பின்னர், காலையில் அந்த பெண் கதவைத் திறந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு பூஜை நடித்திருப்பது தெரிய வந்தது.

அத்துடன், “இங்கு இரவு நேரத்தில் நடந்த வசிய பூஜை பற்றிய தகவல்கள் அந்த கிராம மக்களுக்குத் தெரிய வந்ததையடுத்து, அந்த கிராம மக்கள் கடும் பீதியடைந்தனர்.

இதனையடுத்து, பயந்து போன அந்த கிராம மக்கள், சம்மந்தப்பட்ட அந்த பெண்ணுடன் சேர்ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து, முரளியை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அந்த பெண்ணை வசியம் செய்யவே இரவு நேரத்தில் பூஜை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவர் இன்னும் எத்தனை பெண்களிடம் இது போன்று நடந்துகொண்டார் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.