தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 26ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனிடையே தற்போது இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்திசார்ஜ். ராணா புரோடக்சன் சார்பில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்து வரும் லத்தி சார்ஜ் படத்தில் இளைய திலகம் பிரபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 
 
லத்தி சார்ஜ் படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 3-வது கட்ட படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து நடிகர் விஷால் முதல்முறை இயக்குனராக களமிறங்கும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் முதல் லண்டனில் தொடங்க உள்ளது. 

முன்னதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமான எனிமி படத்தின் தயாரிப்பாளர் S.வினோத் குமாரின் மினி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்த புதிய திரைப்படத்திலும் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

எனிமி படத்தைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் S.வினோத்குமார் உடன் இணைந்துள்ள விஷாலின் இந்த புதிய திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.