மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விரட்டி அடிக்கிறது.

நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்று ஆவேசமாக பேசியிருந்தார். மேலும் மக்களவையில் உரையாற்றிய ராகுல் காந்தி அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த நிலையில் மக்களவையில் தமிழகம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் குறித்து பலமுறை பேசியது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு ராகுல் காந்தி 'நானும் ஒரு தமிழன் தான்' என்று பதிலளித்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் மக்களவை உரைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரைக்கு, அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்' என்று தெரிவித்துள்ளார்.